அட்டனில் பள்ளத்தில் வீழ்ந்தது முச்சக்கர வண்டி ; மூவர் காயம்

அட்டன் – போடைஸ் பிரதான வீதியின் போடைஸ் என்சி பகுதியில் இன்று வியாழக்கிழமை (12) காலை சுமார் 11.00 மணியளவில் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.

சுமார் 70 அடி ஆழமான பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கர வண்டியில் இருந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

டிக்கோயா பகுதியிலிருந்து டயகம நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து நேரத்தில் சாரதி உட்பட மூவர் அதில் பயணித்திருந்தனர். இவர்கள் டிக்கோயா பகுதியிலிருந்து டயகம நோக்கி தோட்டப் பகுதிகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த மூவரும் பொது மக்களின் உதவியுடன் உடனடியாக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தினால் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கரவண்டியை மீட்க முயன்றபோது மேலும் ஒரு ஆபத்தான சம்பவம் ஏற்பட்டுள்ளது.

பள்ளத்தில் சிக்கியிருந்த முச்சக்கரவண்டி திடீரென மீண்டும் கீழ்நோக்கி உருண்டு சென்றதாக கூறப்படுகிறது. அச்சமயம் அருகில் நின்றிருந்த ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். அந்த தருணம் அங்கிருந்தவர்களுக்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டியை அகற்ற முயன்றபோது அது கீழ்நோக்கி நகர்ந்த அந்த பயங்கரமான தருணம் கமராவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதிவேகமாக வாகனம் செலுத்தியதனால் கட்டுப்பாட்டை இழந்ததே இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.