மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனைப் பாலத்திற்கு அருகாமையிலுள்ள தீவுப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, இன்று வியாழக்கிழமை (12) இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, குறித்த தீவுப் பகுதியில் சூட்சுமமான முறையில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே சந்தேகநபர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.
இதன்போது,ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மில்லிலீட்டர் கோடா, 67,500 மில்லி லீட்டர் சட்டவிரோத மதுபானம், இரண்டு பெரிய கலன்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் 26 மற்றும் 36 வயதுடைய நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.




