பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செல்வி பிரதிபா;குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குகஇபாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குநிவாரண உதவி வழங்குக.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வைகோ அவசர வேண்டுகோள்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், வேடநத்தம் கிராமத்தில், கடந்த 10.03.2026 ஆம் தேதி, கோரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து நெறிக்கப்பட்டு மிகக் கொடுரமாக படுகொலை செய்யப்பட்ட குறுக்குச் சாலை அரசு மேல்நிலைப்பள்ளியின் 12 ஆம் வகுப்பு மாணவி செல்வி பிரதிபாவின் வீட்டில் அவரது பெற்றோர் சுப்புராஜ் – காளீஸ்வரி மற்றும் மூத்த மகள் செல்வி வித்யா ஆகியோர் உடன் இருக்க, தங்களின் அன்பான கவனத்திற்கு இந்த வாட்ஸ் அப் கடிதத்தை அனுப்புகிறேன்.
மாணவி பிரதீபாவின் எளிய இல்லத்தில், கழிப்பறை வசதி இல்லாத நிலையில், இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்காக வழக்கமாகச் செல்லும் ஊரின் எல்லைப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்று இருக்கிறார்.
இரவு 7 மணி வரை மகள் வீடு திரும்பவில்லையே என்று கருதிய தந்தை பக்கத்து வீட்டுக்காரர்களுடன் அப்பகுதி எங்கும் தேடி இருக்கிறார்கள். என்றாலும் கண்டுபிடிக்க முடியாத பதற்றத்தில், குளத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தைப் பதற்றத்துடன் கூறி முறையிட்டுள்ளனர்.
அங்கிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ் என்பவர் “இப்ப என்னையா செய்ய முடியும்; காலை 10 மணிக்கு வாங்க” என்று சற்றும் மனிதாபிமானமற்ற முறையில் திருப்பி அனுப்பி இருக்கிறார்.
இக்கிராமத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.
இரவு முழுவதும் மிகுந்த பதற்றத்தோடு ஊர் மக்கள் அனைத்து திசைகளிலும் காணாமல் போன மாணவியைத் தேடி உள்ளனர்.
தொடர்ந்து, மறுநாள் காலை 10 மணிக்கு குளத்தூர் காவல் நிலையத்திற்கு சென்றபோது புதிதாக பணிக்கு சேர்ந்த ராமலட்சுமி என்கிற காவல் உதவி ஆய்வாளர் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று முறையிடுமாறு சொல்லி உள்ளார்.
பெற்றோரும், ஊர் மக்களும் பதற்றத்தோடு விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றபோது, அதன் ஆய்வாளரான பிரவீணா என்பவர் “உங்க மகள் எங்கேயாவது ஓடிப் போயிருப்பா; எங்களை வந்து ஏன் இப்படி இம்சை பண்றீங்க” என்று சிறிதும் பொறுப்பற்ற முறையில் அலட்சியமாகச் சொல்லிவிட்டு, மனுவை திருத்தி எழுதி தாருங்கள் என்று கூற, திருத்தி வழங்கிய அந்த மனுவையும் வாங்காமல் “நீங்கள் மீண்டும் குளத்தூர் ஸ்டேஷனில் தான் இந்த மனுவை கொடுக்க வேண்டும் என்று சற்றும் கண்ணியமற்ற முறையில் விரட்டியுள்ளார்.
அந்த மனுவோடும், மனதில் வேதனையோடும் குளத்தூர் காவல் நிலைய எல்லையை நெருங்கியபோது, மாணவி பிரதீபா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கழுத்து நெறிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளதை ஏற்கனவே தேடிக் கொண்டிருந்த ஊர் மக்கள் கண்டுபிடித்து விட்ட தகவல் வர துடிதுடித்தவாறு ஊருக்கு திரும்பி உள்ளனர்.
இன்று (14.03.2026) அந்த புகைப்படங்களை அலைபேசி வழி என்னிடம் காட்டினர். அந்தப் புகைப்படங்களை பார்த்து துடிதுடித்துப் போனேன்.
முதல் நாள் இரவே குளத்தூர் காவல் நிலைத்தில், மனுவைப் பெற்று உடனடியாக போலீஸ் படையை சம்பவ இடத்திற்கு அனுப்பி நடவடிக்கையை தொடங்கி இருந்தால் மாணவியை பாதுகாத்திருக்கலாம் என்றும், குற்றவாளிகளைக் கூட பிடித்து இருக்க கூடும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும், அங்கிருந்த ஊர்ப் பொதுமக்களும் என்னிடம் தெரிவித்தனர்.
முதல் நாள் இரவும், மறுநாள் காலையும் குளத்தூருக்கும், விளாத்திகுளத்திற்கும் மாறி மாறி காவல்துறையின் கீழ்மட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுக்கச் சென்றவர்களை அலைக்கழித்தது காவல்துறையின் நன் மதிப்பிற்கு இப்பகுதியில் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்களைக்காக்க வேண்டிய காவல்துறை பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டனர் என்கிற கோபம் இப்பகுதி மக்களிடம் உள்ளது.
எனினும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு மதன் இ.கா.ப. அவர்கள், நம்பிக்கை ஊட்டுகின்ற வகையில் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் என்று பொதுமக்கள் கூறினர்.
இறந்த மாணவி பிரதீபா திரும்ப வரப்போவதில்லை. ஆனால், மனித உருவில் நடமாடிய கொடிய வெறி நாய்களால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கழுத்தில் துண்டு போட்டு நெறிக்கப்பட்டு கோரமாகப் படுகொலை செய்யப்பட்டு உள்ளது பெரும் ஆத்திரத்தை மக்களிடத்தில் ஏற்படுத்தி உள்ளது.
உண்மைக் குற்றவாளிகளை முழுமையான ஆதாரங்களுடன் விரைந்து கண்டுபிடித்து, குற்றவாளிகள் வெளியில் நடமாட முடியாத வகையில் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கத்தக்க வகையில் விரைவாக தண்டனையைப் பெற்றுத் தருவதற்கு முழு வீச்சில் காவல் துறை செயலாற்ற வேண்டும்.
பிரதிபாவின் பெற்றோர்கள் அன்றாடம் கூலி வேலைக்கு செல்லக் கூடியவர்கள்; அந்த வீட்டில் ஒரே ஒரு மின்விசிறி கூட உடைந்த நிலையில் இருக்கின்றன. சிறிய நார் கட்டிலும் உடைந்த நிலையில் உள்ளது. கழிப்பறை, படுக்கை அறை என்று வசதியும் இல்லாத சின்னஞ்சிறிய வீடு. அங்கிருந்து தான் இதனை எழுதுகிறேன்.
வேறு எந்த வசதியும் இல்லாத நிலையில், மூத்த மகள் செல்வி வித்யா மிகுந்த சிரமங்களுக்கு இடையே மூன்றாம் ஆண்டு B.E (EEE) தூத்துக்குடி வாகைக்குளம் பகுதியில் உள்ள மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் பயின்று வருகிறார் .
இளைய மகள் பிரதீபா கொடூரமாக கொல்லப்பட்ட துயரில் பரிதவித்துக் கொண்டிருக்கின்ற குடும்பத்தின் நிலையை நேரில் பார்த்து பெரும் துயர் கொண்டேன்.
இரண்டு மூன்று நாட்களாக ஊரில் ஒரு வீட்டிலும் அடுப்பு எரியவில்லை. எந்த வேலைக்கும் ஊர் மக்கள் போகவில்லை. பெற்றோரும் உணவு அருந்தவில்லை; குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை பிரேதத்தை வாங்கவும் முன் வரவில்லை.
இத்தகவல்களை என்னிடம் பாதிக்கப்பட்ட பிரதீபாவின் பெற்றோரும், ஊர் பிரதிநிதிகளும் சொன்னபோது எனது துயரமும் பன்மடங்காயிற்று.
இத்தகைய நிலையில், மிக மிக ஏழ்மை நிலையில் பரிதவித்துக் கொண்டிருக்கின்ற பிரதிபாவின் பெற்றோர் சுப்புராஜ் -காளீஸ்வரி இணையரின் துயரத்திற்கு ஒரு ஆறுதலாக தகுந்த நிவாரணத்தை தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும் என்பதுடன், குடும்பத்தில் எஞ்சி இருக்கின்ற ஒரே மகள் செல்வி வித்யா பொறியியல் பட்டத்தை நிறைவு செய்வதற்கான கல்விச் செலவை அரசே ஏற்பதுடன், அப்படிப்பு முடிந்தவுடன் கல்வித் தகுதிக்கு ஏற்ற அரசு வேலைவாய்ப்பை தமிழ்நாடு அரசு வழங்கிட தாங்கள் இப்போதே தகுந்த ஆணையைப் பிறப்பிப்பீர்கள் என்று கருதுகிறேன்.






