நான்கிலொரு பங்கினர் வறுமையால் பாதிப்பு: அமைச்சர் உபாலி பன்னிலகே தகவல்!

நாட்டில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 80 சதவீதமானோர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனரென கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே குறிப்பிட்டார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

சமூக கட்டமைப்பில் காணப்படும் வறுமையை ஒழிப்பதற்கு கொள்கை ரீதியில் பல தீர்மானங்களை எடுத்துள்ளோம். கிராமிய வறுமையை ஒழிப்பதற்கே முன்னுரிமை வழங்கப்படும். அதற்கமைய, ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் வறுமைக்கான காரணங்களைக் கண்டறிந்து, சமூக அபிவிருத்தி சபையின் அனைத்துப் பிரதிநிதிகளும் இணைந்து அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிக்கவுள்ளனர்.

வறுமை ஒழிப்புக்காகவே கிராம புறங்களை  இலக்காகக் கொண்டு நலன்புரித் திட்டங்கள்  செயற்படுத்தப்படுகின்றன தற்போது மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகப் பொருளாதாரத்தில் ஒருவித தாக்கமும் ஏற்படவில்லை. கடந்த 15 மாத காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரம் பலப்படுத்தப்பட்டதன் காரணமாக அந்தத் தாக்கத்தைக் குறைத்துக்கொள்ள முடிந்துள்ளது.

அவ்வாறு பொருளாதாரத்தைப் பலப்படுத்தியிருக்காவிட்டால், மீண்டும் ஒரு வரிசை யுகம் உருவாகியிருக்கும். உலகளாவிய மட்டத்தில் எவ்வித பிரச்சினையும் தற்போது தோற்றம் பெறவில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். எதிர்க்கட்சிகளை தவிர மக்கள் உலக நடப்பினை நன்கு அறிவார்கள் என கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.