இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் தாமதமாகவே செய்து வருகின்றது !

நாடு மீண்டும் QR குறியீடு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த QR குறியீடு எரிபொருள் ஒதுக்கீட்டுக்காக வழங்கப்படுவதால் கட்டாயமாக எரிபொருள் நுகர்வு கட்டுப்படுத்தப்பட்டு அதிருப்தி அதிகரித்து பல பொருளாதார பிரச்சினைகள் உருவாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கேகாலை தேர்தல் தொகுதி அலுவலக திறப்பு விழாவில் ஞாயிற்றுக்கிழமை (15) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாம் மக்களுக்கு அசௌகரியம் உருவாகியுள்ள இந்த நெருக்கடியிலிருந்து குறுகிய அரசியல் இலாபம் அடைய முயற்சிக்க மாட்டோம்.

இத்தகைய நிலைமை உருவாகும் என்று பாராளுமன்ற அமர்வுகளில் தொடர்ந்து நாம் கூறி வந்த சந்தர்ப்பங்களில் ஆளும் தரப்பு அமைச்சர்கள் எம்மைப் பார்த்து சிரித்து கேலி செய்தனர்.

எமது கருத்துக்களை விமர்சித்தனர். எமது கருத்துக்ளை வைத்து சேறு பூசினர். கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்படுவதால் நமது நாட்டுக்கு எழும் சிக்கலான நிலைமை தொடர்பாக மாற்றுத் திட்டமொன்றை வகுக்குமாறு நான் கூறிய சந்தர்ப்பத்தில் வெளிவிவகார அமைச்சரின் கூற்றுப்படி நமது நாட்டிற்கு அவ்வாறு எந்த பிரச்சினையும் ஏற்படாது என்று பிரஸ்தாபித்தார்.

உண்மையிலேயே நமது நாட்டிற்கு அவ்வாறு பிரச்சினை ஏதும் இல்லையென்றால் இவ்வாறு QR குறியீடுகளை வழங்க வேண்டிய தேவையில்லை தானே, அன்று நான் இது குறித்து சபையில் கூறும்போது அரசாங்கம் அதை புறக்கணித்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நான் இவ்வாறு கூறிய வேளை அரசாங்கம் இவற்றை லேசாக எடுத்துக்கொண்டது. மேலும் சிலர் எனது பேச்சை வைத்து கேலி செய்தனர்.  அவ்வாறு கேலி செய்து 12 நாட்கள் கடப்பதற்கு முன்பே QR குறியீட்டை வழங்க அரசாங்கம் நிர்பந்திக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா ரஷ்யா மீது விதித்த தடைகளுக்கு 30 நாட்கள் காலக்கெடு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், நமது நாட்டிற்குத் தேவையான எரிபொருள் பெறுவதற்கு ரஷ்யாவுடன் பேசி வேலைத்திட்டமொன்றை வகுக்குமாறு நான்  கூறினேன்.

அந்நாட்களில் அதை செய்யாமல் சிக்கலில் மாட்டிக்கொண்டு பல நாட்கள் கடந்த பிற்பாடு, இப்போது ரஷ்ய தூதுவரை சந்திக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் தாமதமாகவே செய்து வருகின்றது. எதிர்க்கட்சி தரும் நல்ல ஆலோசனைகளையும் ஏற்றுக்கொள்ளாத அளவிற்கு அரசாங்கத்தின் ஆணவ மனப்பான்மையும் அகங்காரமும் பெரிதாகி காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த அரசாங்கத்திற்கு எவ்வாறு ஆட்சியை நடத்துவது என்பது தெரியவில்லை. ஜனாதிபதி அநுர குமார தலைமையிலான அரசாங்கம் மக்களையும் நாட்டையும் ஏமாற்றி, எந்த முன்னாயந்தமும் இல்லாமல் இங்கும் அங்கும் அலைந்து திரிந்து ஆட்சியை நடத்தி வருகிறது.

வெற்றிகரமான ஆட்சிக்கு அபாயங்களை எதிர்கொள்ளக்கூடிய மூலோபாயங்களை வகுக்க வேண்டும். இந்த அரசாங்கத்திடம் எந்த மூலோபாய  திட்டமிடலும் இல்லை. நாம் இவற்றை கூறும் போது எமது கருத்துக்களை வைத்து சமூக வலைதளங்கள் வழியாக சேறுபூசும் நவடிக்கைகளை முன்னெடுக்க மட்டுமே அரசாங்கத்திற்கு அறிந்த ஒரே விடயமாக காணப்படுகின்றன.

Strategic Scenario planning என்பது நாட்டில் எதிர்கொள்ளக்கூடிய அனைத்து சூழல்களையும், அனைத்து ஆபத்தான சந்தர்ப்பங்களையும் முன்கூட்டியே கணித்து முன்னாயத்த செயல்திட்டமொன்றை தயாரிப்பதாகும்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது குண்டுவீசியபோது போரின் முன்னோட்டங்களை அரசாங்கம் கருத்திற் கொள்ளவில்லை. எதிர்க்கட்சி இது குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தது.

IMF இணக்கப்பாட்டில் நாட்டிற்கும் மக்களுக்கும் பாதகமாக காணப்படும் அம்சங்களில் திருத்தங்களை முன்வைக்குமாறு யோசனை முன்வைத்த சமயம் அரசாங்கம் இன்றுவரை எந்த முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் இது தொடர்பாக எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

தித்வா சூறாவளிக்குப் பின்னர் சர்வதேச நன்கொடையாளர் மாநாடு ஒன்றை கூட்டுமாறு கோரிக்கை முன்வைத்த சமயம் ஜனாதிபதி “அனே ப்ளீஸ் வேண்டாம்” என்று கூறினார். இவ்வாறான ஆட்சியில் மக்கள் முற்றிலுமாக பன்முக பாதிப்புகளுக்கே முகம் கொடுக்க நேரிடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் பொருளாதார பிரச்சினைகள் நிலவும் நிலையில் அரசாங்கம் தரமற்ற நிலக்கரியையே இறக்குமதி செய்துள்ளது. நேற்றைய தினம்கூட உற்பத்தி செய்யப்பட வேண்டிய மின்சாரம் 135 மெகாவோட்டால் குறைந்து காணப்படுகின்றன.

மின் நிலையத்தின் தரவுகளின்படி அரசாங்கம் இறக்குமதி செய்த நிலக்கரி அனைத்தும் தரமற்றவையாக காணப்படுகின்றன. அரசாங்கத்திற்கு இவை பிரச்சினையாகத் தெரியாவிட்டாலும், நிலக்கரி மின் நிலையத்தால் தேவையான மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாத நிலை காணப்படுவதனால், எரிபொருள் மின் நிலையங்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளன.

இந்த நிலக்கரி மோசடியால் இறுதியில் மின்சாரப் பயனாளர்களே அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இதுமட்டுமின்றி தரமற்ற மருந்துகளும் நாட்டிற்கு கொண்டுவரப்படுகின்றன. இவ்வாறு போகும் போக்கைப் பார்த்தால், விவசாயிகளின் உரங்களுக்கும் QR குறியீடு வைக்கப்படுமோ என்று அச்சம் காணப்படுகின்றது.

இந்த அரசாங்கத்தின் ஒழுங்கற்ற, திறனற்ற மற்றும் ஊழல் நிறைந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பு, தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் மக்களுக்கு வெளிப்படுத்தியது உண்மையை உணர்த்துவதற்காகவே.

பெண்களின் மாதவிடாய் வறுமை குறித்து நாம் பேசிய சமயங்களில் அதற்கும் சேறு வீசிய அரசாங்கம், இன்று மாதவிடாய் வறுமைக்கு எதிரான செயல்திட்டம் தேவை என்பதை  ஏற்றுக் கொண்டுள்ளது.

கொரோனா காலத்தில் எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி உண்மையைக் கூறியபோது கேலி செய்தவர்களே இன்று அந்த உண்மையை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இந்த அரசாங்கம் ஏமாற்று, பொய், கூச்சல் மற்றும் வெறும் நாடகம் என்பவற்றையே செய்து வருகின்றது. சமூக வலைதளங்கள் வழியாக பொய்களை பரப்புவதே அரசாங்கத்திற்குத் தெரிந்த ஒரே விடயமாக காணப்படுகின்றன.

உண்மையை எப்போதாவது இவர்கள் எதிர்கொள்ள வேண்டி வரும். அவ்வாறே உண்மை ஒரு நாள் வெல்லும் என்பதையும் சேறு பூசும் ஆளும் தரப்பினர் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த அரசாங்கத்திற்கு வேலை செய்யத் தெரியாது, அரசியல் எதிரிகளை பழிவாங்கும் செயல்களைச் செய்யவே இவர்களுக்குத் தெரியும்.  அரசியல் எதிரிகளை பழிவாங்கினால் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டாது. அரசாங்கத்திடம் இந்த கேள்விகளுக்கும் பிரச்சினைகளுக்கும் பதில் இல்லை.

கடந்த காலத்தில் வீரர்கள் என்று போற்றப்பட்ட ஆட்சியாளர்கள் மக்கள் சக்திக்கு அஞ்சி வீடு திரும்பினார்கள் என்பதை இந்த அரசாங்கம் மறந்துவிடக் கூடாது.

மனிதனை உயிர்வாழ வைப்பது மனிதனின் உன்னத கடமை என்பதால், அந்த கடமை மற்றும் பொறுப்பை ஆற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் தயாராக உள்ளன என்றார்.