2019ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திய நபர் ஒருவர், அதன் மூலம் ஈட்டிய பணத்தில் இரண்டு வீடுகள் , ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் சுமார் 360 பவுண் தங்க ஆபரணங்களைச் சேர்த்துள்ளதாகக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக, பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்ட பின்னர், அவரது 02 வீடுகள் மற்றும் மோட்டார் சைக்கிள் தொடர்பில் மன்னார் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, குறித்த சொத்துக்களை முடக்கும் உத்தரவு பெறப்பட்டு தற்போது அமுலில் உள்ளது.
தங்க ஆபரணங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணையில், பிரதான சந்தேகநபரின் மனைவியின் தாயார் பல நிதி நிறுவனங்களில் இந்தத் தங்கத்தை அடகு வைத்துள்ளதோடு, பின்னர் மன்னார் பகுதியிலுள்ள பல நகைக்கடைகளில் அவற்றை விற்பனை செய்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த தங்க ஆபரணங்கள் சட்டவிரோதச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்டவை என்பதைத் தெரிந்தே அடகு வைத்தமை மற்றும் விற்பனை செய்தமை மூலம் நிதிமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், சந்தேகநபரின் மனைவியின் தாயார் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மன்னார் பகுதியை சேர்ந்த 66 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.





