ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேருக்கு எதிரான வழக்கு: ஓகஸ்ட் 17ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

2022ஆம் ஆண்டு கொழும்பு, சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் சட்டவிரோதமான முறையில் வீதி நாடகத்தை அரங்கேற்றி, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேருக்கு எதிரான வழக்கினை மீண்டும் ஓகஸ்ட் 17ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (16) உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், மேலதிக ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக விசாரணை அறிக்கைகள் சட்ட மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

அதன் அடிப்படையில், சட்ட மா அதிபரின் ஆலோசனைகள் மற்றும் விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு அறிவிப்பதற்காக, குறித்த வழக்கினை மீண்டும் ஓகஸ்ட் 17ஆம் திகதி அழைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இன்றைய வழக்கு விசாரணையின் போது, ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட பிரதிவாதிகள் அனைவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.