மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் போரினால் உலகளவில் மேலும் 4.5 கோடி பேர் கடும் பட்டினிச் சூழலுக்குத் தள்ளப்படக்கூடும் என உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று ஜெனீவாவில் ஊடகவியலாளர்களிடம் உலக உணவுத் திட்டத்தின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் கார்ல் ஸ்காவ் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி இறுதியில் போர் ஆரம்பமானது முதல், மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் கப்பல் போக்குவரத்துப் பாதைகள் மாற்றப்பட்டதன் காரணமாக, உலக உணவுத் திட்டத்தின் போக்குவரத்துச் செலவுகள் 18 சதவீதத்தால் அதிகரித்துள்ளன.
மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் பிரதான கடல்வழிப் பாதைகள் முடக்கப்பட்டுள்ளதால், உலகெங்கிலும் உள்ள வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான உணவு விநியோகம் பெரும் தாமதத்தைச் சந்தித்துள்ளது.
சர்வதேச நன்கொடையாளர்கள் தமது நிதியை போர் மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்குத் திருப்பி விட்டுள்ளதால், பட்டினி ஒழிப்புத் திட்டங்களுக்கு நிதி கிடைப்பதிலும் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளது.
தற்போது உலகில் சுமார் 31.9 கோடி பேர் கடும் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். போர் ஜூன் மாதம் வரை நீடித்தால், இந்தப் பாதிப்பு 36.4 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது மனித வரலாற்றிலேயே மிக மோசமான பட்டினிச் சூழலாக அமையும் என கார்ல் ஸ்காவ் சுட்டிக்காட்டியுள்ளார்.



