வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை ரஜ மகா விகாரை வளாகத்தில், ஜெர்மனிய நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணியிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தொல்பொருள் திணைக்கள ஊழியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற மத ஊர்வலத்தின் போது காந்தக தூபியை பார்வையிடச் சென்ற சுமார் 30 வயதுடைய ஜெர்மனியப் பெண்ணை, சந்தேகநபர் பலவந்தமாக மக்கள் நடமாட்டம் குறைவான பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அழைத்துச் சென்று துன்புறுத்த முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சம்பவத்தை அவதானித்த வழிபாட்டிற்காக வந்திருந்த மூன்று இளைஞர்கள் உடனடியாகச் செயல்பட்டு, குறித்த பெண்ணை சந்தேகநபரிடமிருந்து மீட்டுள்ளனர். அவர்களின் துரிதமான செயற்பாட்டினால் அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்திற்குப் பின்னர் பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணி மிஹிந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மிஹிந்தலை ராஜமகா விகாரையின் விஹாராதிபதி கலாநிதி வலவாஹெங்குணவெவே தம்மரத்தன நாயக்க தேரர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் வருகை தரும் இவ்வளாகத்தில் சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். புனித தலத்திற்கு வரும் பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



