வலுசக்தி அமைச்சருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் குற்றப்பிரேரணை தாக்கல் செய்துள்ளது.நீதிமன்றத்தின் ஊடாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் இந்த விடயத்தில் அரசாங்கம் தலையிடவில்லை. நிலக்கரி விவகாரம் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் முறைப்பாடளிக்க வேண்டும். எவரையும் பாதுகாக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்குமான ஊதியம் மற்றும் சேவை நிபந்தனைகளை தீர்மானித்தல் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
2024 ஆம் ஆண்டு ஊழல் எதிர்ப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்புச் சட்டம் முறையாக செயற்படும் வகையில் ஒழுங்கமைக்கப்படவில்லை. இலஞ்ச ஆணைக்குழுவின் சுயாதீனம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இதனால் பல நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டன.இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் பொருட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஊழலை இல்லாதொழித்தால் தான் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியும். கடந்த கால ஊழல் மோசடிகளினால் தான் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். ஊழலுக்கு எதிராக அரசாங்கம் எடுத்த தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகளை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. ஊழல் ஒழிப்பில் இலங்கை முன்னிலையில் உள்ளது.இதனைப் பற்றி எதிர்கட்சியினர் பேசுவதில்லை.
வலுசக்தி அமைச்சருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரம் பற்றி எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட்டு குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.அரசாங்கம் இதில் தலையிடவில்லை. ஆணைக்குழுவுக்கும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை.
வலுசக்தி அமைச்சருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது .எவரையும் பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது என்றார்.




