மத்திய கிழக்கு போர்ச்சூழலால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கங்களைக் குறைக்க நான்கு விசேட குழுக்கள் நியமனம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவும் போர்ச் சூழலால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களை நிர்வகித்தல் மற்றும் பொதுமக்களின் நலன்புரித் தேவைகளைத் தடையின்றி வழங்குவதை உறுதி செய்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்றது.

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அமைச்சரவைத் தீர்மானத்திற்கு இணங்க நியமிக்கப்பட்ட விசேட குழுக்களின் செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

திங்கட்கிழமை (16) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, மத்திய கிழக்கு மோதலினால் ஏற்படக்கூடிய உலகளாவிய ஸ்திரமற்ற தன்மையை எதிர்கொள்வதற்காக நான்கு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பொருளாதாரச் செயற்பாடுகளை நிலைப்படுத்துவதும், மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதுமே இக்குழுக்களின் பிரதான இலக்காகும்.

அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலவின் தலைமையில் கூடிய இக்குழுவின் கூட்டத்தில், பின்வரும் குறுகிய கால மற்றும் நீண்ட காலத் திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது:

மத்திய கிழக்கில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்தல்.

சுயதொழில் மற்றும் வீட்டு அடிப்படையிலான தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து, உள்ளூர் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்தல்.

சிறுவர்களுக்கான பாதுகாப்பான போக்குவரத்து வசதிகள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள், பெண்கள் பாதுகாப்பு மையங்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நிலையங்களின் தொடர்ச்சியான செயற்பாடுகளை உறுதிப்படுத்தல்.

ஏதேனும் அவசர நிலையை எதிர்கொள்வதற்கான தயார்நிலை நடவடிக்கையாக, அத்தியாவசியத் தரவுக் கட்டமைப்புகளை உடனுக்குடன் இற்றைப்படுத்தல்.

இக்கலந்துரையாடலில் குழு உறுப்பினர்களான கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன ஆகியோர் பங்கேற்றனர்.

அத்துடன், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் லோக பண்டார, கிராமிய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் தரங்கனி விக்ரமசிங்க, மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) நில்மினி ஹேரத் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.