தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் சாரதி அலுவலக விடுதியில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்த குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற சாரதி ஒருவரை இன்று வியாழக்கிழமை (19) கைது செய்துள்ளதாக லிந்துலை பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் அதிகாரி பொலிஸ் இன்ஸ்பெக்டர் பாலித நந்தசிறி தெரிவித்தார்.
சந்தேக நபர், அலுவலக விடுதியின் சமையலறையில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து நண்பர்களுக்கு விற்பனை செய்யும் மோசடியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது 50,000 மில்லிலீற்றர் கோடா மற்றும் சட்டவிரோதமாக மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களையும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்டவிரோத மது உற்பத்தி இடம்பெற்று வருவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
65 வயதான சந்தேக நபர் மேலதிக விசாரணையின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.



