கெக்கிராவை மற்றும் ஹபரணை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட ஹொரிவில பகுதியில், ரயில் சமிக்ஞை வடங்களுக்காக தோண்டப்பட்ட குழிக்குள் விழுந்து இரண்டு மாதமேயான குட்டி யானையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
சுமார் 30 காட்டு யானைகளைக் கொண்ட கூட்டமொன்று ரயில் பாதையைக் கடக்க முயன்ற போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
ரயில்வே ஊழியர்களால் சமிக்ஞை வடங்களை இடுவதற்காக தோண்டப்பட்டிருந்த ஆழமான, குறுகிய குழிக்குள் எதிர்பாராத விதமாக குட்டி யானை விழுந்துள்ளது.
குட்டி யானையை மீட்பதற்கு யானைக்கூட்டம் பெரும் முயற்சி எடுத்தபோதிலும் அது தோல்வியில் முடிவடைந்துள்ளது. ஏனைய யானைகள் அங்கிருந்து சென்ற போதிலும், தாய் யானை மட்டும் தனது குட்டியை மீட்பதற்காக அங்கேயே தங்கிப் போராடியுள்ளதாகப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து வனவிலங்கு அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கப்பட்ட போதிலும், அவர்கள் சம்பவ இடத்திற்கு செல்வதற்கு முன்னரே குட்டி யானை உயிரிழந்துள்ளது.





