சிறிலங்கா – பிரேசிலுக்கிடையிலான வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக உயர்த்த இலக்கு!

இலங்கை மற்றும் பிரேசிலுக்கிடையிலான இரண்டாவது கட்ட இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (20) கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சில் நடைபெற்றது.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை 2030ஆம் ஆண்டளவில் 01 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்துவதற்கு இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில், இலங்கை தரப்பில் அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜாவும், பிரேசில் தரப்பில் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான செயலாளர் தூதுவர் சூசன் க்ளீபேங்கும் (Susan Kleebank) தலைமை தாங்கினர்.

பாதுகாப்பு, சட்ட அமுலாக்கம், ஆட்கடத்தல் தடுப்பு, ஆயுர்வேத மருத்துவம் மற்றும் இராஜதந்திரப் பயிற்சி போன்ற துறைகளில் நிலுவையிலுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைந்து முடிக்க இரு நாடுகளும் இதன்போது உறுதியளித்தன.

அத்துடன், பால் பண்ணை மற்றும் கரும்பு உற்பத்தித் திட்டங்களுக்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்திடப்படவுள்ளன.

மேலும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிரேசிலுக்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற நட்புறவுக் குழுக்களை மீண்டும் வலுப்படுத்தவும், பிரேசில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், விவசாய ஆராய்ச்சி, கால்நடை வளர்ப்பு, துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை, விளையாட்டு ஆகிய முன்னுரிமைத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் இரு நாடுகளும் உடன்பட்டன.

இலங்கை மற்றும் பிரேசிலுக்கிடையிலான  அரசியல், பொருளாதார துறைசார் விருத்திக்கு இந்த இருதரப்பு அரசியல் ஆலோசனைக்கூட்டம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

முன்னதாக, தூதுவர் சூசன் க்ளீபேங்க், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தையும் சந்தித்து இருதரப்பு நலன்கள் குறித்துக் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.