நிலாவரையில் புலனாய்வாளர்கள் வியாபார முயற்சியில் ஈடுபடுகின்றனர் என்று வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் போட்டுடைத்துள்ளார்.
வலி. கிழக்கு பிரதேச சபையின் இம் மாதத்திற்கான அமர்வு இன்று வியாழக்கிழமை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இடம்பெற்றது. இவ் அமர்வில் மத்தியில் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் வெற்றிவேல் துவாரகன் தவிசாளரிடம் சிங்களவர்களுக்கு வலிகாமம் கிழக்கில் வியாபார முயற்சியில் ஈடுபட முடியுமா என தனது எதிர்ப்பினைத் தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த தவிசாளர் இன, மத அடிப்படையில் வரையரைகள் கிடையாது. ஆனால் அவர்கள் உள்ளுராட்சி சட்ட தேவைகளையும் ஒழுங்கு விதிகளையும் சரிவர கடைப்பிடிக்க வேண்டும். எமது பிரதேசத்தவர்கள் தெருவோர வியாபாரத்தில் ஈடுபடும்போது சில மனிதாபிமான அடிப்படைகளை சபை கொண்டுள்ளது என்றார்.
குறுக்கிட்ட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வெற்றிவேல் துவாரகன், நிலாவரை சுற்றுலாமையத்தில் புலனாய்வாளர் ஒருவர் வியாபார முற்சியில் ஈடுபடுகின்றார். அவர் சிங்களவர் அவரை ஏன் சபை வெளியேற்றவில்லை என சபையினை சாடியதுடன் அச் சிங்களவரை உடனடியாக வெளியேற்றவும் கோரினார்.
இதற்கு பதிலளித்த தவிசாளர், சிங்கள இனத்தினைச் சேர்ந்த ஒருவர் வியாபார முயற்சியில் ஈடுபடுவதை தெரிந்துள்ள போதும் தன்னால் அவர் புலனாய்வு பணிக்காக முயற்சியில் ஈடுபடுகின்றார் என்பதை அறியவோ நிரூபிக்கவோ முடியாதுள்ளதாக தெரிவித்தார். ஆனால்; ஏற்கனவே பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்பிற்கு எதிரான வழக்குகளை தான் அப்பகுதியில் எதிர்கொண்டுள்ளமையினால் தாங்கள் குறிப்பிட்ட விடயத்தில் ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.






