சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு அமைவாக சனிக்கிழமை (21) நள்ளிரவு முதல் டீசல் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்து கட்டணங்களையும் உடனடியாக 15 சதவீதமான அதிகரிக்க வேண்டும் அதற்கமைய ஆகக்குறைந்த பேருந்து கட்டணத்தை 35 ரூபாவாக திருத்தம் செய்தாக வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜயரத்ன அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (22) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
டீசல் விலை அதிகரிக்கப்படும் என்பதை நாம் ஏற்கனவே எதிர்பார்த்திருந்தோம். மத்திய கிழக்கு நசாடுகளில் நிலவிவரும் யுத்தச் சூழல் மற்றும் பொருளாதாரக் காரணிகள் உலக எரிபொருள் சந்தையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாகியுள்ளது. கடந்த 2025 ஜூலை மாதம் வருடாந்த பேருந்து கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட போது டீசல் லீட்டர் ஒன்றின் விலை 289 ரூபாவாகவே கணக்கிடப்பட்டது. ஆனால், தற்போது டீசல் விலை 382 ரூபா வரை உயர்ந்துள்ள நிலையில், ஒரு லீட்டருக்கு 93 ரூபா நட்டத்தை பேருந்து உரிமையாளர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த நிலையில் எரிபொருள் சூத்திரத்திற்கு அமைவாக பேருந்து கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். குறிப்பாக தற்போது 27 ரூபாவாகக் காணப்படும் ஆகக்குறைந்த பேருந்து கட்டணத்தை 35 ரூபா வரை அதிகரிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். தற்போதைய டீசல் விலை அதிகரிப்பினால் குறுகிய தூர சேவையில் ஈடுபடும் பேருந்தொன்றுக்கு நாளொன்றுக்கு 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபா வரையிலும், நீண்ட தூர சேவை பேருந்துகளுக்கு 15 ஆயிரம் முதல் 20ஆயிரம் ரூபா வரையிலும் நட்டம் ஏற்படுகிறது.
இந்த நட்டத்தை தாங்கிக்கொண்டு எம்மால் தொடர்ச்சியாக பேருந்துகளை இயக்க முடியாது. தற்போதைய நிலையில் இலங்கையில் சுமார் 13ஆயிரம் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளன. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தன்னிச்சையாக முடிவெடுக்காமல், பேருந்து கட்டணக் கொள்கைக்கு அமைவாக உடனடியாக கட்டணத் திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும். கடந்த காலங்களில் இவ்வாறான நெருக்கடிகளின் போது பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் தற்போதைய அரசாங்கம் எமது கோரிக்கைகளை கவனத்தில் கொள்ளாமல் தன்னிச்சையான போக்கை கடைபிடிப்பது கவலைக்குரிய விடயமாக உள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பானது எந்தவொரு அரசாங்கம் ஆட்சியிலிருந்தாலும் தவிர்க்க முடியாத உலகளாவிய ரீதியிலான ஒரு தாக்கமாகும். அன்று 2002 காலப்பகுதியில் திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை முறையாகப் பயன்படுத்த இடமளித்திருந்தால் இன்று மக்கள் இவ்வளவு பாரிய சுமைகளை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. அன்று அதற்கு எதிராகச் செயல்பட்டவர்களே இன்று ஆட்சியிலுள்ளனர். எதுஎவ்வாறாயினும், இன்றைய நள்ளிரவுக்குள் முறையான பேருந்து கட்டணத் திருத்தம் ஒன்றை அறிவிக்காவிடின் நாளை முதல் பேருந்து சேவைகளிலிருந்து விலக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம் என்றார்.



