அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் 4-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள டிமோனா நகரில் பெரிய அளவிலான நெருப்புக் கோளங்கள் விழுந்து வெடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அணுசக்தி மையம் அமைந்துள்ள இந்தப் பகுதியில், முதல் முறையாக இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளை மீறி ஈரானிய ஏவுகணைகள் ஊடுருவித் தாக்கியுள்ளன. ஈரானின் பழைய ஏவுகணைகளிடமிருந்து அணுசக்தி நகரைக் காக்கத் தவறியதை இஸ்ரேலிய ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது. ஈரானின் பிரதான அணுசக்தி செறிவூட்டல் தளமான நடான்ஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட அதே நாளில், அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இஸ்ரேலின் தெற்கு நகரங்களான டிமோனா மற்றும் ஆராத் பகுதிகளில் ஈரான் நடத்திய தாக்குதலில் 160-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். குறைந்தது 2 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைத் தடுக்க இஸ்ரேலிய வான் பாதுகாப்புத் துறை தவறியுள்ளது.
அணுசக்தி மையத்துக்கு அருகிலுள்ள வான் பாதுகாப்பை ஈரானிய ஏவுகணைகள் ஊடுருவிய முதல் சம்பவம் இதுவாகும். சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோக்களில், ஏவுகணைகள் இஸ்ரேலிய இலக்குகளைத் தாக்கும்போது பெரிய அளவிலான வெடிப்புகள் ஏற்படுவது பதிவாகியுள்ளது.





