தச்சன் வேலைத் தேவைகளுக்காக மரங்களை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில், தெஹியோவிட்ட வன அலுவலகத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகளும் ஒரு மர ஆலை உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இதன்போது, மர ஆலை உரிமையாளர்: முறைப்பாட்டாளரிடம் அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுத் தருவதற்காக 10,000 ரூபா இலஞ்சம் கோரிப் பெற்றுக்கொண்டமை, வனப்பாதுகாப்பு உதவியாளர் (அலுவலகம்): அனுமதிப்பத்திர நடவடிக்கைகளுக்காக 1,000 ரூபா இலஞ்சம் பெற்றமை, வனப்பாதுகாப்பு உதவியாளர் (கரவன்வெல்ல): ஆரம்பத்தில் 10,000 ரூபா கோரியதுடன், பின்னர் மரக்குற்றிகளைப் பரிசோதித்து அனுமதி வழங்க 3,000 ரூபா இலஞ்சம் பெற்றமை, பீட் வனப்பாதுகாப்பு அதிகாரி (தெரணியகல): அனுமதிப்பத்திரத்திற்குப் பரிந்துரை வழங்க 3,000 ரூபா இலஞ்சம் பெற்றமை மற்றும் வனப்பாதுகாப்பு உதவியாளர் (அலுவலகம்): ஆவணங்களைத் தயாரித்துக் கொடுக்க 1,000 ரூபா இலஞ்சம் பெற்றமை உள்ளிட்ட குற்றங்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 17ஆம் திகதி பிற்பகல் இவர்கள் அனைவரும் அந்தந்தப் பணித்தளங்களில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.



