இலங்கையின் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கு கியூபா அரசாங்கம் தனது அதிகபட்ச ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான புதிய கியூபா தூதுவர் அதிமேதகு பற்ரிசியா லாசரா பெகோ குவேரா (Patricia Lázara Pego Guerra) தெரிவித்துள்ளார்.
கியூபாவின் புதிய தூதுவருக்கும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேக்கும் இடையிலான சந்திப்பு இன்று (23) அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்றது.
சர்வதேச தடைகளுக்கு மத்தியிலும் கியூபா விளையாட்டுத்துறையில் உலக அளவில் சிறந்து விளங்குவதாக தூதுவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இலங்கை ஒலிம்பிக் பதக்கங்களை வெல்வதற்குத் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ள கியூபா தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவதன் மூலம், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு கியூபா பங்களிப்பு செய்யும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கியூபா மற்றும் இலங்கைக்கு இடையிலான வரலாற்று ரீதியான உறவுகளை அடிப்படையாகக் கொண்டு, இரு நாடுகளும் இணைந்து முன்னெடுக்கக்கூடிய கூட்டுத் திட்டங்கள் குறித்து ஆராயப்படும் என அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அருண பண்டார மற்றும் இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிலையத்தின் தலைவர் லலீஷ கஹட்டபிட்டிய ஆகியோரும் கலந்துகொண்டனர்.



