இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-அண்ட்ரூ பிரஞ்ச் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கிடையிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் ஆளுநரால் மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் முன்னுரிமைத் தேவைகள் குறித்த விடயங்கள் முன்வைக்கப்பட்டன.
பொருளாதார அபிவிருத்தி, காணிப் பிரச்சினைகள், சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றம், மீள்திறன் கொண்ட வாழ்வாதாரம் ஆகிய நான்கு பிரதான விடயங்களின் அடிப்படையில் ஆளுநர் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
முக்கியமாகக் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் சுட்டிக்காட்டிய ஆளுநர், கடந்த காலப் போர்ச் சூழல் காரணமாகப் பலரது காணி ஆவணங்கள் முற்றாக அழிவடைந்துள்ளன. தற்போது மக்களிடமும் காணி ஆவணங்கள் இல்லை, அரச திணைக்களங்களிடமும் அதற்கான பதிவுகள் இல்லை. இதனால் தமது காணிகளுக்கான உரித்துகளை உறுதிப்படுத்த முடியாமல் மக்கள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
இப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி மக்கள் தொடர்ச்சியாகப் பிரதேச செயலகங்கள், மாவட்டச் செயலகங்கள் மற்றும் ஆளுநர் செயலகத்துக்கும் அதிகளவில் வருகை தருகின்றனர். எனவே, அவர்களின் காணிப் பிணக்குகளைத் துரிதமாகத் தீர்த்து, உரிய காணி உரித்துகளை வழங்க வேண்டியது எமது மிக முக்கிய தேவையாகும். இதற்காக அரசாங்கம் ஏற்கனவே ‘ஹிமிகம’ (உரிமை) திட்டத்தையும் ஆரம்பித்துள்ளது,’ எனத் தெரிவித்தார்.
அத்துடன், சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சிகளை மேம்படுத்துதல், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒற்றைச் சாளர முறைமையை உருவாக்குதல், காணி விடுவிப்பு மற்றும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான தொழில்நுட்ப ஆதரவைப் பெறுதல், மற்றும் பசுமைக் காலநிலை நிதி போன்ற சர்வதேச நிதியங்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஐ.நா.வின் ஒத்துழைப்புக்கள் மாகாணத்துக்கு அவசியம் என்பதையும் ஆளுநர் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர், வடக்கு மாகாணத்தின் தனித்துவமான உணர்திறன்களையும் சவால்களையும் ஆளுநர் மிகவும் நுட்பமாகக் கையாளுவதைப் பாராட்டினார். அண்மைய வெள்ளப் பேரிடரின்போது அரசாங்கம் மற்றும் கிராம அலுவலர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பான சேவைகளை அவர் விதந்துரைத்தார்.
அரசாங்கத்தின் உதவித் திட்டங்களுக்கு சமாந்தரமாக, ஐ.நா. முகவர் அமைப்புகளான யுனிசெப் போன்றவை மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் குழுக்களை, குறிப்பாகத் தனித்து வாழும் தாய்மார், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மலையகத் தமிழ் சமூகத்தினரை இலக்காகக் கொண்டு துரித நிவாரணங்களை வழங்கியமையை அவர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார நெருக்கடி மற்றும் உலகளாவிய நிலைமைகள் குறித்துப் பேசிய அவர், இலங்கை போன்ற நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்கான சர்வதேச நன்கொடையாளர்களின் நேரடி நிதியுதவிகள் தற்போது பெருமளவில் சுருங்கியுள்ள யதார்த்தத்தைத் தெளிவுபடுத்தினார்.
எவ்வாறாயினும், பசுமைக் காலநிலை நிதி, இழப்பு மற்றும் சேத நிதி, கடன் பரிமாற்றங்கள் மற்றும் தனியார் முதலீடுகளை ஈர்க்கக்கூடிய அபிவிருத்திப் பத்திரங்கள் போன்ற புதிய நிதியீட்டல் முறைகள் ஊடாக வடக்கு மாகாணத்துக்கு அதிகபட்ச உதவிகளை வழங்க ஐ.நா. தயாராகவுள்ளது எனக் குறிப்பிட்டார். அத்துடன், ‘கொழும்பில் வடக்கு மாகாணத்துக்கான ஒரு தூதராக ஐ.நா. தன்னை உணர்கின்றது’ எனக் குறிப்பிட்ட அவர், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் முதலீடுகளை வடக்கிற்கு ஈர்ப்பதற்குத் தொடர்ந்து குரல்கொடுப்பதாக உறுதியளித்தார்.
முதலீட்டாளர்களை வடக்கு மாகாணத்தை நோக்கி ஈர்ப்பதற்குத் தடையாக உள்ள கடுமையான அதிகாரத்துவ நடைமுறைகள் மற்றும் அனுமதிகளைப் பெறுவதிலுள்ள தாமதங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. வினைத்திறனான ஒற்றைச் சாளர முறைமையொன்று உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, அரசாங்கம் மற்றும் மாகாண சபைக்கு ஒதுக்கப்படும் நிதிகளைத் துரிதமாகச் செலவிடுவதற்கும், கொள்முதல் நடைமுறைகளை விரைவுபடுத்துவதற்கும் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கவும் ஐ.நா. தயாராகவுள்ளது என்றார். ஆளுநரால் சுட்டிக்காட்டப்பட்ட காணி முரண்பாடுகள், காணி விடுவிப்புச் செயன்முறைகள் மற்றும் நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்ட உட்கட்டமைப்பு வேலைத்திட்டங்களுக்கும் முழுமையான ஆதரவு வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஆளுநர் மற்றும் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளரின் உரைகளைத் தொடர்ந்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர்கள், தமது மாவட்டங்களில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் ஆகியனவற்றுடன் தொடர்புடையதாக மக்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினைகள் குறித்து விரிவாகச் சுட்டிக்காட்டினர். அதேபோல, கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலரும், தமது மாவட்டத்தில் நிலவும் பல்வேறுபட்ட காணிப் பிணக்குகள் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.
இறுதியாகக் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண காணி ஆணையாளர், மாகாணத்தில் சுமார் 2 இலட்சம் காணி ஆவணங்கள் கையாளப்பட வேண்டியுள்ளதைக் சுட்டிக்காட்டினார். தற்போதுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஆளணியைக் கொண்டு, குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இந்தப் பணியை நிறைவு செய்வதற்கு, சேவையிலீடுபடும் உத்தியோகத்தர்களுக்கு விசேட ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகம், மாவட்டச் செயலாளர்கள், மாகாணக் காணி ஆணையாளர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு முகவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.






