யாழில் யானைகள் திட்டமிட்டே கொண்டுவந்து விடப்பட்டுள்ளன – பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு, கேவில்பகுதியில் யானைகள் திட்டமிட்டு கொண்டுவரப்பட்டு விடப்பட்டதாக அப்பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் கவலை தெரிவித்துள்ளார்.

உரிய முறையில் அறிவித்தும் யானைகள் ஏற்படுத்திய சேதத்தை அதிகாரிகள் இன்னும் பார்வையிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஒரு சில தினங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு – கேவில் கடற்கரைக்கு வருகை தந்த ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் அங்கு காணப்பட்ட 36 இற்கும் அதிகமான தென்னைகளை நாசம் செய்தன.

சம்பவம் தொடர்பாக உரியவர்களுக்கு தெரிவித்தோம். இதுவரை உரியவர்கள் வந்து பார்வையிடவோ, நஷ்ட ஈடு வழங்கவோ இல்லை..

யானைகள் சேதம் ஏற்படுத்திய இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் இராணுவ முகாம் இருக்கிறது. அவர்களுக்கு யானைகள் வந்தது தெரியவில்லை என்றும் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

வடமராட்சி கிழக்கின் பெரும் பகுதி அதாவது கட்டைக்காட்டில் இருந்து சுண்டிக்குளம் வரையான பெரும் நிலப்பரப்பு தேசிய பூங்கா என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

அதனை உறுதி செய்யும் விதமாக வனஜீவராசிகள் திணைக்களகத்தினர் வேண்டுமென்றே இந்த யானைகளை வடமராட்சி கிழக்கு காட்டு பகுதிக்கு கொண்டு வந்து விட்டதாக சந்தேகமாக உள்ளது.

யானைகளால் உயிரிழப்புகள் ஏற்படுவதனை தவிர்ப்பதற்கு முன்னாயத்தம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட குடும்பஸ்தர் யானைகளால் அழிக்கப்பட்ட 36 தென்னைகளுக்கும் இழப்பீடு கோரியுள்ளார்.