இலங்கையின் அழைப்பின்பேரில் வருகைதந்த கப்பலை உட்பிரவேசிப்பதற்கு அனுமதிக்காமல், தாக்குதல் நடாத்தப்படும் வரை அரசாங்கம் நிறுத்திவைத்தது. எம்மிடமுள்ள தகவல்களின்படி இரண்டாவது கப்பலை (ஐ.ஆர்.ஐ.எஸ் புஷேர்) உள்ளே அனுமதிக்குமாறும், தாம் அமெரிக்காவை சமாதானம் செய்துகொள்கிறோம் எனவும் இந்தியா கூறியதன் பிரகாரமே இலங்கை அரசாங்கம் அதற்கு அனுமதி அளித்தது. மாறாக இவ்விடயத்தில் தாமாக சுயதீர்மானம் மேற்கொள்வதற்கான துணிவு அரசாங்கத்துக்கு இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
பாராளுமன்றத்தில் எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் தயாசிறி ஜயசேகர, முஜிபுர் ரகுமான், ஐக்கிய தேசியக் கட்சியின் ராஜித சேனாரத்ன மற்றும் முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோர் இணைந்து புதன்கிழமை (25) கொழும்பில் நடாத்திய கூட்டு ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டப்பட்டது.
அச்சந்திப்பில் கருத்துரைத்த தயாசிறி ஜயசேகரவினால் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் வருமாறு:
அண்மையில் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரமடைந்திருக்கும் போர் சூழ்நிலை காரணமாக பெருமளவு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. நாம் ஏற்கனவே பலமுறை கூறி வந்ததைப்போல அமெரிக்காவும் இஸ்ரேலும் சர்வதேச சட்டங்களுக்கு முரணான தன்னிச்சையான முறையிலேயே இந்த யுத்தத்தை ஆரம்பித்திருக்கின்றன. இதுகுறித்து நாம் எமது எதிர்ப்பைப் பதிவுசெய்கிறோம். மறுபுறம் ஈரான் மத்திய கிழக்கு நாடுகள் மீது நடாத்திய தாக்குதல்களையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். இவ்விரு தரப்புக்களினதும் பரஸ்பர தாக்குதலில்களினால் எரிபொருள், எரிவாயு விலையேற்றம் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த உலகமும் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருப்பதுடன் இலங்கையிலும் பல வர்த்தக மற்றும் கைத்தொழில் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன.
அதேவேளை 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு எம்மிடம் டொலர் இருக்கவில்லை. ஆனால் இப்போது போதியளவு வெளிநாட்டுக்கையிருப்பு தம்மிடம் இருப்பதாக ஜனாதிபதி கூறுகிறார். அவ்வாறெனில், போர் மூளத்தொடங்கிய வேளையிலேயே நம் நாட்டில் களஞ்சியப்படுத்தக்கூடிய அளவு எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். அதுமாத்திரமன்றி உலக சந்தையில் எரிபொருள் பெரலின் விலை உயர்வடைந்து, பின்னர் அது சரிவடைந்தது. அவ்வாறிருக்கையில் இலங்கையில் மாத்திரம் எரிபொருளின் விலையை மீண்டும் அதிகரித்தது ஏன்? எனவே எரிபொருள் விலையை 50 ரூபாவினால் குறைப்பதற்கும், அதற்குரிய பெறுமதிசேர் வரியை நீக்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
அவரைத் தொடர்ந்து கருத்துரைத்த முஜிபுர் ரகுமான் கூறியதாவது:
மத்திய கிழக்கு யுத்தம் ஒட்டுமொத்த உலகையும் மிகமோசமாகப் பாதித்திருக்கும் பின்னணியில், இவ்விடயத்தில் நாமனைவரும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவேண்டும் என்பதற்காகவே இங்கு ஒன்றிணைந்திருக்கிறோம். இருப்பினும் இவ்விவகாரத்தில் அரசாங்கத்துக்குத் தெளிவான நிலைப்பாடு ஒன்று இல்லை. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் சந்திப்புக்களில் ஒன்றையும், பாராளுமன்றத்தில் பிறிதொன்றையும் கூறுகிறார்.
மக்கள் விடுதலை முன்னணி எதிரணியாக இருந்தபோது மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் இடம்பெற்ற மோதல்களின்போது அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகம் முன்பாகப் போராட்டங்களில் ஈடுபட்டது. ஆனால் இப்போது நடுநிலை வகிப்பதாகக் கூறுவதைத் தவிர வேறெந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை.
அரசாங்கம் அந்த நடுநிலைமையை எவ்வாறு வெளிப்படுத்தியது? அமெரிக்க விமானங்களுக்கும், ஈரானியக் கப்பல்களுக்கும் அனுமதி மறுத்ததன் மூலம் நடுநிலையை வெளிப்படுத்தியதா? இலங்கையின் அழைப்பின் பிரகாரமே தமது கப்பல்கள் வருகைதந்ததாக ஈரானிய தூதுவர் தெளிவாகக் கூறியிருக்கிறார். ஆனால் அமெரிக்கா அனுமதி கோரியது உண்மையாக இருப்பின், அது போர் நோக்கத்தின் அடிப்படையிலேயே அதனைச் செய்திருக்கிறது.
ஆகவே இவை இரண்டும் இருவேறு சம்பவங்களாகும். எனவே இலங்கையின் அழைப்பின்பேரில் வருகைதந்த கப்பலை உட்பிரவேசிப்பதற்கு அனுமதிக்காமல், தாக்குதல் நடாத்தப்படும் வரை நிறுத்திவைத்ததையே அரசாங்கம் செய்திருக்கிறது. எம்மிடமுள்ள தகவல்களின்படி இரண்டாவது கப்பலை உள்ளே அனுமதிக்குமாறும், தாம் அமெரிக்காவை சமாதானம் செய்துகொள்கிறோம் எனவும் இந்தியா கூறியதன் பிரகாரமே இலங்கை அரசாங்கம் அதற்கு அனுமதி அளித்தது. மாறாக இவ்விடயத்தில் தாமாக சுயதீர்மானம் மேற்கொள்வதற்கான துணிவு அரசாங்கத்துக்கு இல்லை என்றார்.




