10 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் ‘குஷ்’  ரக போதைப்பொருளை  கடத்தி வந்த இருவர் இன்று வியாழக்கிழமை  (26) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய விமான சேவைக்கு சொந்தமான ஏ.ஐ.- 3203 (AI-3203) என்ற விமானம் மூலம் இன்று அதிகாலை 05.20 மணியளவில் புதுடில்லியிலிருந்து கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளனர்.

விமான நிலையத்தின் வருகை முனையத்திலிருந்து வெளியேற முயன்ற போதே சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களில் ஒருவர் ஜன்னல் மற்றும் கதவு திரைச்சீலைகள் விற்பனை செய்யும் நிலையத்தில் பணியாற்றும் 25 வயதுடைய இளைஞர் எனவும், மற்றையவர் 26 வயதுடைய சாரதி எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கொண்டு வந்த 04 பயணப் பொதிகளை சோதனையிட்ட போது, அவற்றின் அடிப்பகுதியில் சூட்சுமமான முறையில் 12 பொதிகளாக பொதி செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த  10 கிலோ கிராம் 476 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருட்கள் சுமார் 10 கோடியே 47  இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய போதைப்பொருள் என சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த போதைப்பொருள் தொகுதி தாய்லாந்தின் பாங்கொக் நகரில் கொள்வனவு செய்யப்பட்டமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்களும் போதைப்பொருள் தொகுதியுடன் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு  பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.