மொரட்டுவை, சொய்சாபுர பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்குச் சொந்தமான 150 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை பொலிஸ் புலனாய்வுப்பிரிவு முடக்கியுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மூலம் சொத்துக்களைச் சேர்த்ததாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டைதொடர்ந்து நேற்று புதன்கிழமை (25) ஹொரெத்துடுவை பகுதியில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் 11 பேர்ச்சஸ் நிலத்தில் அமையப்பெற்ற ரூ. 50 மில்லியன் மதிப்புள்ள வீடு ஒன்று, 16 பேர்ச்சஸ் நிலத்தில் அமையப்பெற்ற ரூ.100 மில்லியன் மதிப்புள்ள மூன்று மாடி வீடும் சந்தேக நபருக்குச் சொந்தமானவை என பொலிஸார் தெரிவித்தனர்.
2006-ஆம் ஆண்டின் பணமோசடி தடுப்புச் சட்டம் எண் 5-இன் கீழ், இந்த சொத்துக்கள் நீதிமன்ற உத்தரவின்படி ஏழு நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் இன்று வியாழக்கிழமை (26) மொரட்டுவை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

