பொருளாதார மறுசீரமைப்பு: எலினா பனரிடிஸுடன் சஜித் சந்திப்பு

பொருளாதார மறுசீரமைப்புகள் மற்றும் கொள்கை நவீனமயமாக்கல் குறித்த கலந்துரையாடலுக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சர்வதேச அங்கீகாரமிக்க பொருளாதார நிபுணரான எலினா பனரிடிஸைச் சந்தித்தார்.

முன்னாள் உலக வங்கியின் பொருளாதார நிபுணரும் கிரேக்க பாராளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினருமான Elena Panaritis அவர்கள், பல நாடுகளில் நிறுவன மறுசீரமைப்பு கட்டமைப்பு மாற்றங்கள், பொருளாதார மீள் கட்டமைப்பு நடவடிக்கைகள், நிதி மீள்கட்டமைப்பு நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்திக் கொள்கைகள் தொடர்பாக தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட அனுபவமிக்க நிபுணராக திகழ்கிறார்.

இலங்கையின் நீண்டகால வளர்ச்சிக்கு ஒத்துழைப்பை நல்கும் விதமாக ஆட்சிக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் நடைமுறைக் கொள்கைத் தீர்வுகளை பின்பற்றுவதன் முக்கியத்துவம் என்பன தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையே இக்கலந்துரையாடலில் பிரதானமாக கவனம் செலுத்தப்பட்டன.

மக்களுக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்தவாறு, இலங்கைக்கு நிலையான பொருளாதார மீட்சியை அடைந்து கொள்வதற்கு உதவும் வகையில் உலக மட்டத்தில் பரிசோதிக்கப்பட்ட கொள்கை அணுகுமுறைகளை ஆராய்வதன் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இங்கு சுட்டிக்காட்டினார். பொருளாதார நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்தல் மற்றும் வெளிப்படை தன்மையை பேணும் நிறுவனங்களை உருவாக்குவதில் சர்வதேச அனுபவங்களும் இச்சந்திப்பின் போது மதிப்பாய்வு செய்யப்பட்டன.

வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் வினைத்திறனான அரச சேவையை பெற்றுக் கொடுப்பதனை உறுதி செய்தவாறு, நிதி ஒழுக்கத்தை சமூக நலனுடன் சமநிலைப்படுத்தும் மக்கள் மையப்படுத்தப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

எதிர்கால அபிவிருத்திக்கு உறுதியான அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டு, அதிக பாதிப்புக்குள்ளாகக்கூடியவர்களை பாதுகாக்கும் மறுசீரமைப்புச் செயல்முறை ஒன்றை நோக்கி இலங்கை பயணிக்க வேண்டும் என்பதையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் குறிப்பிட்டார்.