மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் ஈரான் – அமெரிக்க மோதல் நிலையை சமாதானப்படுத்துவதற்காக, இருநாடுகளுக்கும் இடையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சீனா தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த மாத இறுதியில் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த போதிலும், ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான போர் நிலை காரணமாக வொஷிங்டனில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த மோதலில் சீனா எதிர்பார்த்த அளவில் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற காரணத்தினால் அந்த விஜயம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், போர்நிறுத்த முயற்சிகளை முன்னெடுக்க அமெரிக்கா நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், எதிர்வரும் மே மாதம் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் டிரம்ப் பீஜிங் செல்ல உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்த பின்னணியில், ஈரான் போரில் மத்தியஸ்தம் செய்ய சீனா முன்வந்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (Wang Yi ), “ஈரான் மீது நடைபெற்று வரும் மோதலை நிறுத்தும் நோக்கில், சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த சீனா விருப்பம் தெரிவித்துள்ளது” என கூறினார்.
அதேவேளை, சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான், “உண்மையான மற்றும் பொருத்தமான அமைதி பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கான சூழலை உருவாக்குவது தற்போதைய அவசரத் தேவையாகும்” என குறிப்பிட்டுள்ளார். மேலும், “அமைதி பேச்சுவார்த்தைகளை ஊக்குவித்து, போரை நிறுத்துவதற்கான வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும்” எனவும் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றனவா என்பது தொடர்பில் தெளிவான தகவல் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை தொடர்பான சைகைகளை வெளிப்படுத்தியுள்ள நிலையில், அது அமைதிக்கான சிறிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது என சீனா தெரிவித்துள்ளது.
மற்றொரு பக்கம், ஈரான் அரசு அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தகவல்களை மறுத்துள்ளதுடன், அமெரிக்கா முன்வைத்துள்ள யோசனைகளை பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. எனினும், உடனடி பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை என்றும் ஈரான் வெளிவிவகாரத் துறை தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி உடனான தொலைபேசி உரையாடலிலும், “அமைதிக்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி, விரைவில் பேச்சுவார்த்தை செயல்முறையை தொடங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.





