தமிழகத்தில் இதுவரை விதிகளை மீறி கொண்டு செல்லப்பட்ட ரூ.189 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

தமிழகத்​தில் இது​வரை விதி​களை மீறி கொண்டு செல்​லப்​பட்ட ரூ.189 கோடி மதிப்​பிலான பணம், பொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ள​தாக தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக சென்னை தலை​மைச் செயல​கத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்​டி, நடத்தை விதி​களை அமல்​படுத்​தும் பணி​யில் தலா 2,106 பறக்​கும் படைகள் மற்​றும் நிலைக் கண்​காணிப்பு குழுக்​கள் ஈடு​பட்டு வரு​கின்​றன.

தமிழகத்​தில் இது​வரை உரிய ஆவணங்​களின்றி கொண்டு செல்​லப்​பட்ட ரூ.189 கோடி மதிப்​புள்ள பணம் மற்​றும் பொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன. தேர்​தல் விதி​மீறல் தொடர்​பாக ‘சி-​விஜில்’ (cVIGIL) செயலி மூல​மாக மட்​டும் 1,262 புகார்​கள் பெறப்​பட்​டுள்​ளன. அவற்​றின்​மீது உரிய நேரத்​தில் நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது. 16 புகார்​கள் மட்​டும் நிலு​வை​யில் உள்​ளன.

தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரம் மேற்​கொள்ள, அக்​கட்சி சார்​பில் அந்​தந்த மாவட்​டத் தேர்​தல் அலு​வலரிடம் அனுமதி கேட்​கப்​பட்​டுள்​ளது. அசாம், மேற்கு வங்க மாநிலங்​களின் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பணிக்​காக தமிழகத்​தில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதி​காரி​கள் சென்​றுள்​ளனர்.

4 ஐபிஎஸ் அதி​காரி​கள் காவல் பார்​வை​யாளர்​களாக​வும், 42 ஐஏஎஸ் அதி​காரி​கள் பொதுப் பார்​வை​யாளர்​களாக​வும் வெளி மாநிலங்​களுக்கு சென்​றுள்​ளனர். தமிழகத்​தில் வேட்​புமனு தாக்​கல் 30-ம் தேதி தொடங்​கு​கிறது.

அதன்​பிறகு, பதற்​ற​மான வாக்​குச்​சாவடிகள் குறித்த விவரங்​கள் தெரிய​வரும். அந்த வாக்​குச்​சாவடிகளில் மாவட்ட ஆட்​சி​யர்​கள், காவல் கண்​காணிப்​பாளர்​கள் கூடு​தல் கவனம் செலுத்​தி, நடவடிக்கை எடுப்​பார்​கள். அங்கு வாக்​குப்​ப​திவு நிகழ்​வு​கள் முழு​வதும் நேரலை (வெப்​காஸ்​டிங்) செய்​யப்​படும்.

நடவடிக்​கைகளைக் கண்​காணிக்க நுண்​பார்​வை​யாளர்​களும் நியமிக்​கப்​படு​வார்​கள். காஞ்​சிபுரத்​தில் திரு​மணத்​துக்கு பட்​டுச் சேலை வாங்​கு​வதற்​காக ஒரு பெண் வைத்​திருந்த பணத்தை பறக்​கும் படை​யினர் பறி​முதல் செய்​துள்​ளனர். இது தொடர்​பாக அவர்​களுக்கு உரிய அறி​வுறுத்​தல்​கள் வழங்​கப்​படும் என்று அவர் கூறி​னார்.