கட்டுநாயக்கவில் 3 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றல்

சட்டவிரோதமான முறையில் துபாயிலிருந்து நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் இன்று வெள்ளிக்கிழமை  (27) பகல் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள பயணப் பொதிகளைப் பெற்றுக்கொள்ளும் பகுதியில் உரிமையாளர்களற்ற நிலையில் கைவிடப்பட்டிருந்த 13 பயணப் பைகளைச் சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.

இதன்போது, அவற்றுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிகரெட் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

குறித்த பயணப் பைகளில் இருந்து “பிளாட்டினம்” மற்றும் “மான்செஸ்டர்” ரக 200,000 சிகரெட்டுகளைக் கொண்ட 1,000 கார்ட்டூன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட இந்த சிகரெட் தொகுதி, மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பில் உள்ள சுங்கத் தலைமையகத்தின் பிரதான களஞ்சியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் தொடரப்பட்டுள்ளன