யாழிலிருந்து மன்னார் நோக்கி கடத்தப்பட்ட கேரளா கஞ்சாவுடன் லொறி சுற்றிவளைப்பு: ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கி கடத்தப்பட்ட சுமார் 35 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் லொறி ஒன்றும் அதன் சாரதியும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை  (27) இலுப்பைக்கடவை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள், பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டைக்கல்லாறு பாலத்திற்கு அருகில் வீதித் தடையில் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கி வந்த சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்றை நிறுத்துமாறு சைகை காட்டினர்.

பொலிஸாரின் சமிக்ஞையை மீறி லொறி நிறுத்தப்படாமல் வேகமாகச் சென்றதையடுத்து, ஜயபுரம் பொலிஸ் நிலைய அதிகாரிகளின் உதவியுடன் குறித்த லொறி ஜயபுரம் சந்தியில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டது.

லொறியைச் சோதனையிட்ட போது, அதில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35 கிலோ 370 கிராம் கேரளா கஞ்சா  போதைப்பொருளுடன் குறித்த லொறியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக அவர் ஜயபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜயபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றன