பாதுகாப்பு, அமைதி மற்றும் வளர்ச்சியை விரும்பினால், அமெரிக்க ராணுவம் தங்கள் நாட்டில் இருந்து செயல்பட வளைகுடா நாடுகள் அனுமதிக்க கூடாது என ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் கூறியுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த மாதம் 28-ம் தேதி போர் தொடுத்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மற்றும் மையங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இங்கிருந்து அமெரிக்க போர் விமானங்கள் புறப்பட்டு சென்று ஈரான் மீது தாக்குதல் நடத்துகின்றன.
துபாயில் தாக்குதல்: ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க ராணுவத்துக்கு உதவியாக, ட்ரோன் எதிர்ப்பு ஆயுதங்களை உக்ரைன் வழங்கியுள்ளது. இந்த ஆயுதங்கள் துபாயில் உள்ள ஒரு கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன. அந்த இடத்தை தாக்குதல் நடத்தி அழித்துள்ளதாக ஈரான் ராணுவ தலைமையகம் கதம் அல்-அன்பியா கூறியுள்ளது. மேலும், துபாயில் பதுங்கியுள்ள அமெரிக்க ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘பாதுகாப்பு, அமைதி மற்றும் வளர்ச்சியை விரும்பினால், அமெரிக்க ராணுவம் தங்கள் நாட்டில் இருந்து செயல்பட வளைகுடா நாடுகள் அனுமதிக்க கூடாது. நாங்கள் எப்போதும் முதலில் தாக்குதல் நடத்துவதில்லை. ஆனால், எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், பதிலடி கொடுப்போம்’’ என தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைக்கு நம்பிக்கை தேவை: ஈரான் – அமெரிக்கா இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடத்தும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக சவுதி அரேபியா, எகிப்து, மற்றும் துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர்களும் பாகிஸ்தானில் இன்றும் நாளையும் ஆலோசனை நடத்துகின்றனர். இதை வரவேற்றுள்ள ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஷ் ஷெரீப்பிடம் பேசுகையில், “போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நம்பிக்கை தேவை” என கூறியுள்ளார்.


