மன்னார் வங்காலை கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்டு கடல் அட்டைகளைப் பிடித்த நான்கு நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து பெருமளவிலான கடல் அட்டைகளும் சுழியோடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. வட மத்திய கடற்படை அதிகாரிகள் கடந்த மார்ச் 27ஆம் திகதி இரவு மன்னார் வங்காலை கடற்பரப்பில் விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை மேற்கொண்டனர்.
இதன்போது சட்ட விதிமுறைகளை மீறி இரவு நேரத்தில் சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 349 கடல் அட்டைகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் 26 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், அவர்கள் மன்னார் வங்காலை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் உபகரணங்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.





