குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் 2வது நாளாக இன்றும் அகழ்வுப் பணிகள் மும்முரம்

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் இரண்டாம் நாளான இன்றும் (31) அகழ்வுப் பணி நடைபெற்று வருகிறது.

1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம் மக்கள் ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு, அப்பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் கடந்த காலங்களில் நடத்தப்பட்டன.

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான நீண்ட விசாரணைகளைத் தொடர்ந்து, களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.பிரதீபன் முன்னிலையில் அகழ்வுப் பணிகள்  நேற்று திங்கட்கிழமை (30) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்த அகழ்வுப் பணி இரண்டாம் நாளான இன்றும் தொடர்கிறது.

அகழ்வு இடம்பெறும் குறித்த மனிதப் புதைகுழி உள்ள இடத்தில் இதுவரை எதுவித எலும்புக் கூடுகளும் மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய தின அகழ்வுப் பணிகளின் போதும்,  படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

அத்துடன் காணாமலாக்கப்பட்டோர் அலுவலக அதிகரிகள், பொலிஸார், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை, இராணுவத்தினர், தடயவியல் பிரிவு, தொல்லியல் திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற அதிகாரிகள் உட்பட பலர் இந்த அகழ்வுப் பணி இடம்பெறும் புதைகுழி அருகில் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது.