பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைச் சட்டமூலம்!

கொடிய பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கான சட்டமூலம் இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை (30) இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் இச்சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பான இறுதி வாசிப்பின்போது ஆதரவாக 62 வாக்குகளும் எதிராக 48 வாக்குகளும் கிடைத்துள்ளன.

இதில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தார். அதன்படி, 62 – 48 என்ற வாக்குகளின் அடிப்படையில் பாலஸ்தீனர்களுக்கான மரண தண்டனை சட்டம் நிறைவேற்றப்பட்டது.

பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவ நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு 90 நாட்களுக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படும்  என்றும் இந்த தண்டனை 180 நாட்கள் வரை ஒத்திவைக்கப்படலாம் என்றும் இந்த சட்டத்தில் குறிப்பிடப்படுகிறது.

தண்டனை பெற்றவர்களுக்கு மன்னிப்பு கோரும் உரிமை கிடையாது. இருப்பினும் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மரண தண்டனைக்கு பதிலாக ஆயுள் தண்டனை வழங்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உண்டு என்றும் கூறப்படுகிறது.

தற்போது இஸ்ரேலில் நிறைவேற்றப்பட்டு மரண தண்டனை சட்டத்தின்படி, மேற்கு கரையில் இருக்கக்கூடிய நபர்கள் இஸ்ரேல் நாட்டினரை படுகொலை செய்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

இந்த புதிய சட்டம் பாலஸ்தீனியர்களுக்கானதே தவிர, இஸ்ரேலியர்களுக்கானது அல்ல என்றும் இந்த சட்டம் பாரபட்சமானது என்றும் விமர்சனங்கள் எழுகின்றன.

இந்த சட்டத்தால் ஜனநாயகக் கொள்கைகள் சீர்குலைக்கப்படும் அபாயம் காணப்படுகிறது என்றும் பல ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கின்றன.

இது சர்வதேச சட்டத்தை மீறும் செயற்பாடாக காணப்படுகிறது என பாலஸ்தீனம் உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக இஸ்ரேல் வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதமர் பென் குவிர் நேற்று கூறுகையில், “இது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்த நாள். நம்முடைய எதிரிகளுக்கு துயரம் நிறைந்த நாள். பயங்கரவாதிகளுக்கு எதிரான ஒரு தெளிவான முடிவு. பயங்கரவாத பாதையை தேர்ந்தெடுப்பவர்கள் மரண பாதையை தேர்ந்தெடுக்கின்றனர் என்றார்.