உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்ற தூதுக்குழு இந்தியாவுக்கு ஆய்வுப் பயணம்

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தலைமையிலான பாராளுமன்ற தூதுக் குழுவினர், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று மார்ச் 22ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை புதுடில்லிக்கு பாராளுமன்ற ஆய்வுப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இந்த இலங்கைத் தூதுக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான எதிர்க்கட்சியின் முதற்சோலாசான் கஜயந்த கருணாதிலக, நலீன் பண்டார ஜயமஹ, மஞ்சுள சுரவீர ஆரச்சி, சதுர கலப்பத்தி, ரவீந்திர பண்டார, அசித நிரோஷண எகொட வித்தான, ஷாந்த பத்ம குமார சுபசிங்ஹ, (சட்டத்தரணி) கீதா ஹேரத், கே.இளங்குமரன், கிங்ஸ் நெல்சன், தர்மப்பிரிய விஜேசிங்க ஆகியோர் உள்ளடக்கியிருந்தனர்.

குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவைச் சேர்ந்த பாராளுமன்ற பணியாளர்களான உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) கே.பி.சந்தன மற்றும் பிரதான உத்தியோகத்தர் எஸ்.டபிள்யூ.ரி.ஆர்.டி. சில்வா மற்றும் பாராளுமன்ற அதிகாரி டபிள்யூ.கே.ஏ.எம்.எம்.எம்.அர்த்தனாயக்க ஆகியோரும் இந்தப் பயணத்தில் இணைந்திருந்தனர்.

மார்ச் 22ஆம் திகதி புதுடில்லியைச் சென்றடைந்த தூதுக் குழுவினர் மறுதினம் முதல் உத்தியோகபூர்வ ஆய்வுப் பயணத்தைத் தொடங்கினர்.

இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளரைச் சந்தித்த இக்குழுவினர், பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள பிரேர்னா ஸ்தல் பூங்காவில் மலரஞ்சலி செலுத்தினர். இவர்கள் லோக் சபாவின் சபாநாயகர் ஓம் பிர்லாவையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்தியப் பாராளுமன்ற அமைப்பு முறை குறித்து தெளிவுபடுத்தும் அமர்வொன்றும் நடத்தப்பட்டது. இதில் நிறுவனக் கட்டமைப்புகள் மற்றும் சட்டமியற்றும் செயல்முறைகள் பற்றிய மதிப்புமிக்க புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், இக்குழுவினர் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரத்துக்கான நிலைக்குழு மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான நிலைக்குழு ஆகியவற்றுடனும் பயனுள்ள கலந்துரையாடல்களை நடத்தினர்.

மார்ச் 24ஆம் திகதி இலங்கை தூதுக் குழுவினர் “PM Gati Shakti” தேசிய திட்டம் உள்ளிட்ட தொழில்நுட்ப மற்றும் கொள்கை ரீதியான விடயங்கள் குறித்த தொடர் அமர்வுகளில் பங்கேற்றனர்.

அத்துடன், இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை அதிகார சபை, இந்தியாவின் சூரிய வலுசக்தி கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்டதுடன், இந்திய தொழில் கூட்டமைப்புடனும் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.

இரு நாடுகளின் பாராளுமன்ற உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்திய – இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தினருடனும் இலங்கைத் தூதுக் குழுவினர் சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.

மார்ச் 25ஆம் திகதி இந்தியாவின் நகர்ப்புறப் போக்குவரத்து அமைப்புகள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் உள்ள சிறந்த நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இத்தூதுக் குழுவினர் புதுடில்லி மெட்ரோ ரயில் கூட்டுத்தாபனத்திற்கு விஜயம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து நகர்புற ஆளுகை, டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் பொருத்தமான நகர்ப்புற அபிவிருத்தி போன்ற விடயங்கள் குறித்து ஆய்வு செய்யும் நோக்கில் புதுடில்லி மாநகர சபையின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் பற்றிய கலந்துரையாடலிலும் இவர்கள் ஈடுபட்டனர்.

அத்துடன், பாரிய அளவிலான நீர் விநியோக முகாமைத்துவம் மற்றும் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் குறித்து ஜல் சக்தி அமைச்சின் கீழ் உள்ள ஜல் ஜீவன் திட்டத்தின் அதிகாரிகளையும் இவர்கள் சந்தித்திருந்தனர்.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், இலங்கைத் தூதுக்குழுவினர் அடல் சேது பாலம், ஜவஹர்லால் நேரு துறைமுகம் மற்றும் நவி மும்பை விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் தளங்களைப் பார்வையிட்டனர்.

மேலும், இத்தூதுக்குழுவினர் பவர் எக்ஸ்சேஞ்ச் இந்தியா லிமிடெட் நிறுவனத்தைப் பார்வையிட்டதோடு, மகாராஷ்டிர மாநிலத்தின் கௌரவ முதலமைச்சரையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதேவேளை, இலங்கைத் தூதுக்குழுவினர் மார்ச் 27ஆம் திகதி Gateway of India மற்றும் Elephanta Caves உள்ளிட்ட புகழ்பெற்ற இடங்களைப் பார்வையிட்டனர்.

மேலும், இத்தூதுக்குழுவினர் மகாராஷ்டிர சட்டசபையின் சபாநாயகர் மற்றும் முதலீட்டு அபிவிருத்தி மற்றும் தொழில்துறைத் துறைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடினர்.

இந்தப் பாராளுமன்ற ஆய்வுப் பயணத்தில் இலங்கைத் தூதுக்குழுவின் பங்கேற்பின் மூலம் இந்தியாவுடனான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், தொடர்ச்சியான பாராளுமன்ற ஒத்துழைப்பின் வாயிலாக உள்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தித் துறைகளில் நிறுவனத் திறனை மேம்படுத்துவதற்கும், அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கும், சிறந்த நடைமுறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் இலங்கை தனது தொடர்ச்சியான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது.