கிரிமியாவில் ரஷ்ய இராணுவ விமானம் விபத்து ; 29 பேர் உயிரிழப்பு

கிரிமியா தீபகற்பத்தில் ரஷ்ய இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 29 பேரும் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

‘An-26’ ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம், சோவியத் காலத்து தயாரிப்பாகும். இது பொதுவாக இராணுவ சரக்குகள் மற்றும் சிறிய எண்ணிக்கையிலான வீரர்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படுகிறது.

விமானத்தில் இருந்த 06 ஊழியர்கள் மற்றும் 23 பயணிகள் என மொத்தம் 29 பேரும் உயிரிழந்துள்ளனர். எவரும் உயிர் பிழைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் ஒரு மலை உச்சியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ஏவுகணைத் தாக்குதல்கள் அல்லது ட்ரோன் தாக்குதல்கள் போன்ற வெளிப்புறக் காரணிகள் எதற்கும் ஆதாரங்கள் இல்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை மாலை அந்நாட்டு நேரப்படி சுமார் 6:00 மணியளவில் இந்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. நீண்ட தேடுதலுக்குப் பின்னரே அதன் சிதைவுகள் கண்டறியப்பட்டன.

உக்ரேனின் ‘அன்டோனோவ்’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த ரக விமானங்கள் கடந்த காலங்களிலும் பல விபத்துக்களைச் சந்தித்துள்ளன. 2020-இல் கார்கிவ் பகுதியிலும், 2021-இல் ரஷ்யாவின் கிழக்குப் பகுதியிலும் இத்தகைய விமானங்கள் விபத்துக்குள்ளாகிப் பலர் உயிரிழந்துள்ளனர்.

2014-இல் உக்ரேனிடமிருந்து கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டது. நான்கு ஆண்டுகளாக நீடிக்கும் ரஷ்ய – உக்ரேன் போரில், கிரிமியாவிலுள்ள ரஷ்ய இராணுவ தளங்களை இலக்கு வைத்து உக்ரேன் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.