ஈரானைச் சுற்றியுள்ள போர் நிலைமையால் உருவான பொருளாதார தாக்கம் இன்னும் “பல மாதங்கள் நீடிக்கும்” என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதன்கிழமை அவுஸ்திரேலிய மக்களுக்கு ஆற்றிய விசேட தொலைக்காட்சி உரையில், இந்த போரினால் பெற்றோல் மற்றும் டீசல் விலைகள் வரலாற்றிலேயே அதிக அளவில் உயர்ந்துள்ளதாகவும், அதன் சுமையை பொதுமக்கள் ஏற்கனவே உணர ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“இந்தப் போரில் அவுஸ்திரேலியா நேரடியாக ஈடுபடவில்லை. ஆனால் அதன் விளைவாக அனைத்து ஆஸ்திரேலியர்களும் அதிக விலைகளைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், பொதுப் போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்தவும் பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
“வழக்கமான வாழ்க்கையைத் தொடருங்கள். வாகனங்களுக்கு தேவையான அளவு மட்டும் எரிபொருளை நிரப்புங்கள்; மற்றவர்களையும் கருத்தில் கொள்ளுங்கள்,” எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
உலகளாவிய சவால்களை ஒற்றுமையுடன் எதிர்கொண்டால் ஆஸ்திரேலியா இதையும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார்.
சர்வதேச முக்கிய தருணங்களில் மட்டுமே வழங்கப்படும் இத்தகைய உரைகள், கடைசியாக கொரோனா பெருந்தொற்று காலத்திலும், அதற்கு முன்னர் 2008 பொருளாதார நெருக்கடி நேரத்திலும் நடைபெற்றிருந்தன.
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் ஆரம்பித்ததிலிருந்து உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்து வருகின்றன. முக்கிய கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் சுமார் 20% மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இவ்வழியாக கடத்தப்படுவதால், இந்த தடக்கம் உலக பொருளாதாரத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து பல நாடுகள் எரிபொருள் சேமிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், உடனடி நிவாரணமாக அவுஸ்திரேலிய அரசு சில தற்காலிக நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
அவற்றில், எரிபொருள் வரியை அரைவாசியாக குறைத்தல், கனரக வாகனங்களுக்கு வீதி பயன்பாட்டு கட்டணத்தை 3 மாதங்களுக்கு நீக்கம், உள்நாட்டு எரிபொருள் கையிருப்பை அதிகரித்தல் மற்றும் பிராந்திய நாடுகளுடன் இணைந்து இறக்குமதியை அதிகரித்தல் என்பன அடங்கும்.




