10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத தேமுதிகவுக்கு 10 சீட் கொடுத்த திமுக

பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத தேமுதிகவுக்கு திமுக பத்து சீட் கொடுத்துள்ளது. மானம், ரோஷம் உள்ள திமுகவினர் இம்முறை அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள் என்று நடிகை விந்தியா ஆவேசமாகப் பேசினார்.

தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜேந்திரனை ஆதரித்து நடிகை விந்தியா, கிழக்கு தாம்பரத்தில் நேற்று மாலை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: திமுகவில் தாம்பரம் தொகுதியில் ராஜாவுக்கு சீட் தராததால் அவரது ஆதரவாளர்கள் கேட்டதற்கு, ‘‘ இரண்டு மூன்று முறை இருந்துட்டாரு இல்ல அதன் பிறகு என்ன’’ எனக் கேட்டு கேவலப்படுத்தி தனது சொந்தக் கட்சிக்கார்களையே அவமானப்படுத்தியுள்ளார் டி.ஆர்.பாலு.

பத்து பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லாத தேமுதிகவுக்கு பத்து சீட்டை திமுக கொடுத்துள்ளது. திமுகவில் மானம், ரோஷம் உள்ளவர்கள் இந்த முறை அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள். ஐந்து வருட திமுக ஆட்சியில் திமுக காரர்களே கடுப்பாகியுள்ளனர். தமிழக பெண்களின் பாதுகாப்பிற்காக அதிமுகவிற்கு வாக்கு அளிக்குமாறு கேட்கிறோம்.

கொடூரமான திமுக ஆட்சி தேவையா? திமுகவை நம்பாதீர்கள். உங்களை காப்பாற்றக்கூடிய நல்ல வாய்ப்பு தான் இந்த தேர்தல். அதிமுக ஆட்சி வந்தால் மட்டுமே பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியும். தமிழகமும், தமிழக மக்களுக்கும் தலைநிமிர்ந்து ஒரு நிமிடம் யோசித்தால் திமுக இருக்காது. இந்த தேர்தலில் பல இடங்களில் அதிமுக கூட்டணியிடம் திமுக கூட்டணி தோல்வியடையும். இவ்வாறு அவர் பேசினார். இதேபோல் சோழிங்நல்லூர் தொகுதியில் போட்டியிடும் கே.பி. கந்தனை ஆதரித்து ஜல்லடியன்பேட்டையில் நடிகை விந்தியா, பிரச்சாரம் மேற்கொண்டார்.