தமிழ்நாட்டிலும் திமுக – காங்கிரஸ் குழப்ப அணியாகத்தான் இருக்கிறது.. புதுச்சேரியிலும் அதேபோல் குழம்பிப்போன அணியாக தான் இருக்கிறது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய், பரப்புரை செய்தார். அப்போது அவர் பேசும்போது, “புதுச்சேரியில் தவெக போட்டியிடுகிறது. நமது கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகம் உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றது.
மக்களுடன் மக்களாக இருப்பவர்களைத் தான் நமது கட்சியின் வேட்பாளர்களாகத் தேர்வு செய்துள்ளேன். நமது வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க உங்கள் அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். காங்கிரஸ் கூட்டணி 5, 6 முறை ஆட்சியில் இருந்தது. அந்த கூட்டணியில் இருந்த ஒரு தலைவர் மக்களை மட்டும் ஏமாற்றவில்லை, அவரது தலைவரையே எப்படி ஏமாற்றினார் என்பதை உலகமே பார்த்து சிரித்தது. தற்போது அந்தக் கட்சி இப்போது எந்த நிலையில் இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்.
தமிழ்நாட்டிலும் திமுக – காங்கிரஸ் குழப்ப அணியாகத்தான் இருக்கிறது. புதுச்சேரியிலும் அதேபோல் குழம்பிப்போன அணியாக இருக்கிறது. மற்றொரு கூட்டணி, பாஜக, என். ஆர் காங்கிரஸ் கூட்டணி. அவர்கள் சேர்ந்து நிற்க முடியாமல், சோர்ந்து நிற்கும் கூட்டணி.
கூட்டணி இருக்கிறது என ஒரு பக்கம், கூட்டணி இல்லை என மற்றொரு பக்கம் செய்திகள் வெளியாகின. இதில் நம்மை வைத்து ஒரு அரசியலும் செய்தனர். இங்கு மற்றொரு அரசியல் வியாபாரமும் நடக்கிறது. தமிழகத்தில் எப்படி இரண்டு பேர் சீக்ரெட் கூட்டணி வைத்து இருக்கிறார்களோ அதே பார்முலா தான் புதுச்சேரியிலும். நம்மை பற்றி தவறாக கதை கூறினார்கள். தற்போது என்ன ஆயிற்று, நாம் தனியாக நிற்கும் போது நாம் யாரிடமும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒட்டி உறவாடவே இல்லை என்பது தெரிந்து விட்டது. தவெக மக்கள் பக்கம் நிற்கிறோம். மக்களும் தவெக பக்கள் நிற்கிறார்கள்.
காங்கிரஸ்-பாஜக ஆகிய இரண்டு கூட்டணியில் உள்ள கட்சிகளும் ஒன்றியத்திலும் ஆட்சியில் இருந்தவர்கள் தான். புதுச்சேரி மக்களின் மாநில அந்தஸ்து கோரிக்கை பல வருடங்களாக இருக்கிறது. அதை காங்கிரஸ் மற்றும் பாஜக அரசாங்கங்கள் நிறைவேற்றவில்லை. 20 வருடங்களுக்கு முன்பு சுஷ்மா ஸ்வராஜ் சொன்னபோதும் ஏன் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கவில்லை? இந்த ஒரு கேள்விக்கு காங்கிரஸ்-திமுக கூட்டணியோ, பாஜக கூட்டணியோ பதில் சொல்வார்களா? நேரடியாக கேட்கிறோம் மனசாட்சி இருந்தால், மக்கள் மீது அக்கறை இருந்தால் இந்த கோரிக்கையை ஏன் இவ்வளவு காலமாக இழுக்கிறீர்கள் என பதில் சொல்லுங்கள்.
தீய சக்தி திமுக இருக்கிற காங்கிரஸ் கூட்டணியும் வேண்டாம். பாஜக கூட்டணியும் வேண்டாம். தமிழகத்தில் தவெக ஆட்சிதான் அமைய வேண்டும். புதுச்சேரியிலும் தவெக ஆட்சிதான் அமைய வேண்டும். விசில் புரட்சியை ஏற்படுத்த விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள். தேர்தல் என்பது மக்கள் சம்பந்தப்பட்டது. இங்கே ஏற்கனவே அரசியலில் இருப்பவர்கள் மக்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வதில்லை





