அமெரிக்காவின் F-15E போர் விமானம் ஈரான் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அதில் பயணித்த உயர் அதிகாரி ஒருவரை அமெரிக்கப் படைகள் அதிரடி மீட்பு நடவடிக்கை மூலம் மீட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
“நாங்கள் அவரை மீட்டுவிட்டோம்!” என அமெரிக்க டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் இந்தத் தகவலை உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளார்:
மீட்கப்பட்டவர் ஒரு புகழ்பெற்ற கேணல் தரத்திலான அதிகாரி ஆவார். அவர் தற்போது பாதுகாப்பாகவும் நலமுடனும் இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் அவருக்குச் சில காயங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அவர் விரைவில் குணமடைந்து விடுவார் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
விமானம் வீழ்த்தப்பட்ட கணத்திலிருந்து, அந்த அதிகாரியின் இருப்பிடத்தை அமெரிக்க இராணுவம் 24 மணிநேரமும் கண்காணித்து வந்துள்ளது.
அவரை மீட்பதற்காக உலகிலேயே அதிநவீன ஆயுதங்களைக் கொண்ட டஜன் கணக்கான போர் விமானங்களை அமெரிக்கா ஈரானுக்குள் அனுப்பியது.
இந்த ஆபத்தான மீட்புப் பணியின் போது ஒரு அமெரிக்க வீரர் கூட உயிரிழக்கவோ அல்லது காயமடையவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் ஈரான் வான்பரப்பில் அமெரிக்கா தனது முழுமையான ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“ஒரே நேரத்தில் இரண்டு பாரிய இராணுவ நடவடிக்கைகளை எவ்வித இழப்புமின்றிச் செய்திருப்பது, நமது இராணுவத்தின் மேன்மையை உலகிற்கு நிரூபித்துள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.





