ஹார்முஸ் ஜலசந்தியை உடனே திறக்க பரிந்துரை

அமெரிக்​கா, ஈரான் இடையி​லான போரை நிறுத்த வரைவு திட்​டம் தயாரிக்​கப்​பட்டு உள்​ளது. முதல்​கட்​ட​மாக 45 நாட்​கள் போர் நிறுத்​தத்தை அமல் செய்ய வேண்​டும். ஹார்முஸ் ஜலசந்தியை உடனடி​யாக திறக்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட பல்​வேறு அம்​சங்​கள் வரைவு திட்​டத்​தில் இடம்​பெற்​றுள்​ளன.

அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படை மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையே கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் போர் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஈரானில் இது​வரை 2,100-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். அமெரிக்க ராணுவ தரப்​பில் 13 வீரர்​கள் உயி​ரிழந்து உள்​ளனர். சுமார் 700 அமெரிக்க வீரர்​கள் காயமடைந்​திருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது.

இஸ்​ரேலில் 24 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 7,000-க்​கும் மேற்பட்டோர் காயமடைந்​துள்​ளனர். மேற்கு ஆசி​யா​வில் நீடிக்​கும் போரால் உலகம் முழு​வதும் கச்சா எண்​ணெய், எரி​வா​யுக்கு தட்​டுப்​பாடு ஏற்​பட்​டிருக்​கிறது. உடனடி​யாக போரை நிறுத்த வேண்​டும் என்று ஒட்​டுமொத்த உலக நாடு​களும் வலி​யுறுத்தி வரு​கின்​றன.

இதனிடையே, பத்து நாட்​களுக்​குள் அமெரிக்கா​வுடன் ஒப்​பந்​தத்தை இறுதி செய்ய வேண்​டும் அல்​லது ஹார்​முஸல் ஜலசந்​தியை திறக்க வேண்​டும். இல்​லை​யெனில் ஈரான் நரக​மாக மாறும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். அவர் விதித்த காலக்​கெடு இந்​திய நேரப்​படி ஏப்​ரல் 7-ம் தேதி அதி​காலை​யுடன் நிறைவடைகிறது.

இந்த சூழலில் அமெரிக்​கா, ஈரான் இடையே திரைமறைவில் அதிதீ​விர​மாக அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது. பாகிஸ்​தான், எகிப்​து, துருக்கி உள்ளிட்ட நாடு​கள் சமரச தூது​வர்​களாக செயல்​பட்டு வருகின்​றன. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்​ஸ், அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்​காப் மற்​றும் ஈரான் வெளி​யுறவு அமைச்​சர் அப்​பாஸ் அராக்சி ஆகியோர் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை, திங்​கள்​கிழமை​களில் தொலைபேசி​யில் மிக நீண்ட நேரம் பேச்​சு​வார்த்தை நடத்தி​ய​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

இதன் அடிப்​படை​யில் போர் நிறுத்த வரைவு திட்ட அறிக்கை தயார் செய்​யப்​பட்டு உள்​ளது. முதல்​கட்​ட​மாக 45 நாட்​கள் போர் நிறுத்​தத்தை அமல் செய்ய வேண்​டும். ஹார்​முஸ் ஜலசந்​தியை மீண்​டும் திறக்க வேண்​டும். செறிவூட்​டப்​பட்ட யுரேனி​யத்தை சர்​வ​தேச அணுசக்தி முகமை​யிடம் ஈரான் ஒப்​படைக்க வேண்​டும். மேற்கு ஆசியா​வில் நிரந்தர அமை​தியை ஏற்​படுத்த விரி​வான அமை​திப் பேச்​சு​வார்த்​தையை தொடர வேண்​டும் என்பன உள்​ளிட்ட பல்​வேறு அம்​சங்​கள் வரைவு திட்​டத்​தில் இடம்​பெற்​றுள்​ளன.

ஈரான் அரசி​யல் தலை​வர்​கள் மற்​றும் அந்த நாட்​டின் ராணுவ தளப​தி​கள் பொது அரங்​கில் அமெரிக்கா​வுக்கு எச்சரிக்கை விடுக்​கும் வகை​யில் பேசி வரு​கின்​றனர். ஆனால் திரைமறை​வில் அமெரிக்கா​வுடன் அமை​திப் பேச்சு​வார்த்தை நடத்தி வரு​கின்​றனர். இதுதொடர்​பாக ஈரான் வட்​டாரங்​கள் கூறும்​போது, “அமெரிக்கா​வுடன் நாங்கள் நேரடி பேச்​சு​வார்த்​தை​யில் ஈடு​பட​வில்​லை.

சில நாடு​கள் சமரச முயற்​சி​யில் ஈடு​பட்டு உள்​ளன. அந்த நாடு​களின் பிர​தி​நி​தி​களு​டன் தொடர்​பில் உள்​ளோம். அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து காசா, லெபனானில் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின. ஆனால் இரு அமைதி ஒப்பந்தங்களும் காகித அளவில் மட்டுமே உள்ளன. இப்போதும் காசா, லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதே நிலை எங்களுக்கும் ஏற்படும். எனவே தற்காலிக போர் நிறுத்​தத்தை நம்பி ஹார்​முஸ் ஜலசந்தியை திறக்க முடி​யாது. எந்​தவொரு காலக்​கெடு​வை​யும் ஏற்க முடி​யாது’’ என்று தெரி​வித்​தன.