ஆங்காங்கே மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ளது செயலிழப்புகளே தவிர திட்டமிட்ட மின்வெட்டு அல்ல

நாட்டில் நிலவும் எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் இதுவரை திட்டமிட்ட மின்வெட்டுகளை நடைமுறைப்படுத்தவில்லை எனவும், ஆங்காங்கே இடம்பெறுபவை மின்விநியோகச் செயலிழப்புகளே எனவும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை (07) பாராளுமன்றத்தில் மின்சாரத் தடை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், நாட்டின் சில பகுதிகளில் தினசரி ஒரு மணிநேரம் அல்லது சில மணிநேரங்கள் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக பொதுமக்கள் முறையிடுவதைச் சுட்டிக்காட்டினார். மின்வெட்டு அமல்படுத்தப்படுவதாயின், அது குறித்து முன்கூட்டியே மக்களுக்குத் தெளிவுபடுத்தாதது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் குமார ஜயகொடி, பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிட வேண்டாம், மின்சாரக் கட்டமைப்பில் அடிக்கடி செயலிழப்புகள் ஏற்படுவது வழமையான ஒன்று என்றும், அது  புதிய விடயம் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

குறுகிய காலத்திற்கு ஏற்படும் இத்தகைய மின்சாரத் தடைகளை மின்வெட்டு என்று அழைக்காமல், மின்விநியோகச் செயலிழப்பு என அழைப்பதே பொருத்தமானது என அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.