“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. அந்த உண்மையை கொண்டு வருவோம் என்று எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக கூறியது. கண்டுபிடித்துவிட்டார்களா?” என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி திமுக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி அதிமுக வேட்பாளர் உஷாராணிக்கு ஆதரவாக வாழப்பாடியில் இன்று மாலை வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
அதிமுக ஆட்சியின்போது, 2017-ல் கடுமையான வறட்சி, அதனைத் தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் புயல் பாதிப்பு, அதனைத் தொடர்ந்து கரோனா தொற்று பாதிப்பு. கரோனா தொற்றின்போது அரசுக்கு ஒரு ரூபாய் கூட வருமானம் இல்லை. வேலைவாய்ப்பு இல்லாமல் மக்கள் வீடுகளில் முடங்கியிருந்தனர். அந்த நிலையில் மக்களுக்கு ரேஷனில் விலையில்லா அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் வழங்கினோம். ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.1,000 வழங்கினோம். அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு ரூபாய் பிடித்தம் இல்லாமல் வழங்கினோம். அப்போது, பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுக்கு ரூ.2,500 வழங்கினோம். இவ்வளவு செய்தோம்.
ஆனால், திமுக ஆட்சியில் வறட்சி வந்ததா? புயல் வந்ததா? கரோனா வந்ததா? எந்த பாதிப்பும் இல்லை. மக்களுக்கும் எதுவும் செய்யவில்லை. ஆனால், ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்திருக்கிறார்கள். திமுக அரசின் சாதனை, நம்மை எல்லாம் கடனாளியாக மாற்றியது தான். திமுக ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டது. மின் கட்டணம், வீட்டு வரி, குடிநீர் வரி என அனைத்தும் உயர்த்தப்பட்டுவிட்டது.
ரேஷன் அரிசி தரமற்றதாக இருக்கிறது என்று மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே, அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சமைக்கக்கூடியதாக தரமான அரிசி விலையில்லாமல் வழங்கப்படும். அது மட்டுமல்லாது, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவையும் விலையில்லாமல் வழங்கப்படும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்ததாக, திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா தான் ஆடியோ வெளியிட்டிருந்தார். அவர்மீது நடவடிக்கை எடுக்கவில்லை. என்மீது வழக்கு போடுவார்கள். வழக்கு போடட்டும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. அந்த உண்மையை கொண்டு வருவோம் என்று எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக கூறியது. கண்டுபிடித்துவிட்டார்களா?
இப்போது நான் சொல்கிறேன். முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டு சிறையில் வைக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சட்ட ரீதியாக விசாரணை நடத்தி, அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். பணப்பயிர்களுக்கான காப்பீட்டுத் தொகை பிரிமீயம் 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் குடிமராமத்துத் திட்டம், அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட திமுகவால் நிறுத்தி வைத்த திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றார்.





