எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிப்பு – முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு

எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அங்கு திமுக வேட்பாளரின் வேட்புமனு ஏற்புக்கு அதிமுக, நாதக உள்ளிட்ட எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, திமுக வேட்பாளர் காசி, தவெக வேட்பாளர் அருண்குமார், நாதக வேட்பாளர் பிரியதர்ஷினி மற்றும் சுயேச்சைகள் உள்பட 36 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

வேட்புமனுக்கள் பரிசீலனை நாளான இன்று, எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான நடராஜன் முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.

அப்போது, அதிமுக வேட்பாளர் பழனிசாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரியதர்ஷினி மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால், திமுக வேட்பாளர் காசியின் வேட்பு மனுவுடன் அவர் அளித்த பிரமாண பத்திரத்தில் இறுதி பக்கத்தில் உறுதிமொழி ஏற்பவரின் கையெழுத்தில் அவரது மனைவி கையெழுத்து போடப்பட்டிருந்ததாகவும், அவருக்கு மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த அவரது மனைவியின் பிரமாண பத்திரத்தில் உறுதிமொழி ஏற்பவர் என்ற இடத்தில் அவரது கணவரான காசியின் கையெழுத்து இருந்ததாகவும் புகார் எழுந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, நாதக, சுயேச்சை வேட்பாளர் மற்றும் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து திமுக வேட்பாளரின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திமுக மேற்கு மாவட்ட செயலாளரும், சேலம் எம்பியுமான டி.எம்.செல்வகணபதி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், தேர்தல் பிரிவு அதிகாரிகள் திமுக வேட்பாளரின் வேட்புமனுவை ஆய்வு செய்த நிலையில், உறுதிமொழி கையெழுத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லை என கூறி வேட்பாளரின் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜன் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து திமுக வேட்பாளர் காசி மற்றும் சேலம் எம்பி டி.எம்.செல்வகணபதி அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.