நாடு எதிர்பார்க்கும் தலைமைத்துவத்தை வழங்க பொதுஜன பெரமுன தயார் ; சாகர காரியவசம் உறுதி

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலில் மக்கள் எதிர்பார்க்கும் சரியான தலைமைத்துவத்தையும் வழிகாட்டலையும் வழங்குவதோடு, கடந்த காலங்களில் இந்தநாட்டுக்கும் பொதுமக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நாட்டை மீண்டும் அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்லும் பொறுப்பை தமது கட்சி பொறுப்பேற்பதற்கு தயாராகவே உள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாடு எதிர்பார்க்கும் தலைமைத்துவத்தையும் வழிகாட்டலையும் வழங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது தயாராக உள்ளது. அறிவுபூர்வமாக தீர்மானம் எடுக்கக்கூடிய மக்களுக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளோம்.

எமது கட்சியுடன் எப்போதும் இணைந்திருக்கும் இடதுசாரி சக்திகளுடன் இணைந்து ஒரு பலமான கூட்டணியை கட்டியெழுப்புவோம். தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய பொய் வாக்குறுதிகள் இன்று வெளிச்சத்துக்க வந்துள்ளன. எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்களை உயர்த்தி, மக்களின் வாழ்வாதாரத்தை இந்த அரசாங்கம் சீர்குலைத்துள்ளது.

வரிச் சுமையினால் மக்கள் கடும் நெறுக்கடியில் தள்ளப்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது சுமத்தப்பட்ட திருட்டுக் குற்றச்சாட்டுகள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

அவர் நாட்டை அபிவிருத்தி செய்த தலைவர். அவருக்கு எதிரான போலிச் சாற்றுகளை முன்வைத்தவர்கள் இன்று மௌனமாக உள்ளனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷவை வேட்பாளராக முன்னிறுத்த எதிர்பார்க்கிறோம். நவீன தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தவும், இளைஞர்களுக்கான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் அவரால் மாத்திரமே முடியும்.

2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் நாட்டில் அமைதியை ஏற்படுத்தி, மக்களின் பயத்தைப் போக்கி, வீடுகளில் அடுப்பு எரிய வழிவகுத்தோம். அத்துடன், சிங்கள புத்தாண்டு கலாசாரத்தை மதிப்பவர்கள்.

பாரம்பரிய முறைப்படி புத்தாண்டு சடங்குகளை முன்னெடுப்போம். மஹிந்த ராஜபக்ஷ நிறுத்திய இடத்திலிருந்து நாட்டை மீண்டும் முன்னோக்கிக் கொண்டு சென்று, கடந்த காலங்களில் இந்தநாட்டுக்கும் பொதுமக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஆசியாவின் பலமான நாடாக இலங்கையை மாற்றுவதே எமது இலக்காகும் என்றார்.

சமீபத்திய செய்திகள்