மத்திய கிழக்கின் மோதல் நிலைமைக்கு மத்தியில் ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட நிவாரண சலுகைகள் டித்வா புயல் தாக்கத்தின் நிவாரண சலுகையாக அமைய கூடாது. ஏனெனில் தித்வா புயல் தாக்கத்தை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட நிவாரணங்கள் முழுமையாக மக்களுக்கு கிடைக்கப்பெறவில்லை. நிவாரண வழங்கலின் முன்னேற்றத்தை அரசாங்கத்தால் குறிப்பி முடியுமா என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவெல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற விளையாட்டில் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மற்றும் இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல் நிலைமையினால் எமது நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
மக்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றி ஜனாதிபதி பாராளுமன்றத்தில் பல அறிவிப்புக்களை விடுத்தார். நல்லது மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
டித்வா புயல் தாக்கத்துக்கு பின்னர் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வந்து பல நிவாரணம் மற்றும் இழப்பீடுகள் தொடர்பில் அறிவித்தார். தித்வா நிவாரணங்கள் எத்தனை பேருக்கு முழுமையாக வழங்கப்பட்டது. நிவாரண வழங்கவின் முன்னேற்றம் என்ன,?
வீடுகளை இழந்தவர்களில் 10 சதவீதமானோருக்கு கூட இன்றுவரை வீடுகள் வழங்கப்படவில்லை. பலர் இன்றும் தற்காலிக தங்குமிடங்களில் தான் உள்ளார்கள். இதுதான் உண்மை.
ஆகவே டித்வா தாக்க நிவாரண அறிவிப்புக்களை போன்று தற்போதைய நிவாரண அறிவிப்புக்கள் அமைய கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்.
மத்திய கிழக்கு மோதல் நிலைமையை குறிப்பிட்டுக் கொண்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகளும், எரிபொருட்களின் விலைகளும் தொடர்ச்சியாக அதிகரிக்கப்படுகின்றன.நடுத்தர வருமான நிலையில் உள்ளவர்கள் தொடர்ந்து ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
எதிர்வரும் புத்தாண்டை கொண்டாட முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். உற்பத்தி பொருளாதாரம் பற்றி அரசாங்கம் பேசுகிறது. ஆனால் அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. வரி அதிகரிப்பதை மாத்திரமே அரசாங்கம் பிரதான இலக்காகக் கொண்டுள்ளது என்றார்.




