போக்குவரத்து அதிகார சபையால் காலவரையற்ற பணித் தடை

கிளிநொச்சிப் பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைப் பேருந்துச் சாரதியுடன் பாரதூரமான முறையில் முரண்பட்ட தனியார் பேருந்து நடத்துனரொருவருக்கு வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் காலவரையற்ற பணித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவரும், பொறியியலாளருமான சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று புதன்கிழமை (08.04.2026) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

செவ்வாய்க்கிழமை (07.04.2026) குறித்த நடத்துனர் இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதியுடன் முரண்படும் காணொளி சமூகவலைத் தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டிருந்தது. துரிதமாகச் செயற்பட்ட வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை காணொளியை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை ஆரம்பித்தது. ஆரம்பக்கட்ட விசாரணைகளில் குறித்த நடத்துனரின் ஒழுங்கீனமான செயற்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் சர்ச்சைக்குரிய நடத்துனருக்குக் காலவரையற்ற பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது. இக் காலப் பகுதியில் அவர் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினூடாக வழியனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளப்பட்ட எந்தவொரு பேருந்திலும் பணியாற்றுவதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பேருந்தின் வழியனுமதிப் பத்திரமானது இரண்டு தினங்களுக்குச் செல்லுபடியற்றதாகும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்தின் போது பயணிகள் சேவையில் ஈடுபடும் தரப்பினரிடையே ஏற்படும் இவ்வாறான ஒழுக்க மீறல்கள், வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் செயற்பாடுகள், மேலதிகக் கட்டணம் அறவிடப்படுதல் அல்லது பயணிகள் வேறு ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொண்டால் எவ்வித தயக்கமுமின்றித் தகுந்த ஆதாரங்களுடன் ( பயணச் சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொளிகள்) 0719090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்குப் பொதுமக்கள் உடனடியாகத் தெரியப்படுத்த முடியுமெனவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.