மிக சக்திவாய்ந்த ஆயுதங்களுடன் தயார்நிலையில் அமெரிக்க போர்க்கப்பல்கள்!

“ஒன்று ஒப்பந்தம், இல்லையேல் தாக்குதல்” என ஈரான் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாகவே, ஈரானைத் துவம்சம் செய்ய அமெரிக்க போர்க்கப்பல்கள் ஆயத்தமாகிவிட்டதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

நியூயோர்க் பத்திரிக்கை ஒன்றுக்கு ட்ரம்ப் அளித்த நேர்காணலில், “எமது போர்க்கப்பல்களில் இதுவரை தயாரிக்கப்பட்டதிலேயே மிகச்சிறந்த மற்றும் நவீன ஆயுதங்களை ஏற்றி வருகிறோம்.

முன்னதாக நாங்கள் நடத்திய தாக்குதல்களை விட இது மிகவும் வீரியமானதாக இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், ஈரான் தரப்பில் லெபனான் போர் நிறுத்தம் மற்றும் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க நிபந்தனை விதிக்கப்பட்டாலும், ட்ரம்ப் அதைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

“ஈரானிடம் தற்போது எந்த துருப்புச் சீட்டும் இல்லை; அவர்கள் உலக நாடுகளை அச்சுறுத்தி மட்டுமே பிழைக்கப் பார்க்கிறார்கள்” என ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் சாடியுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை வழியாக மிகக் குறைந்த அளவு கப்பல்களே அனுமதிக்கப்படுவது குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள அவர், இது ஒப்பந்த மீறல் எனக் கூறியுள்ளார்.