ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் 6 முனை போட்டியால் பிரியும் வாக்குகள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணிக்கு நிகராக நாதக, தவெக, புதிய தமிழகம் மற்றும் சசிகலா தரப்பும் வலுவான வேட்பாளர்களை நிறுத்தி உள்ளதால் 6 முனை போட்டி நிலவுகிறது. வாக்குகள் பிரிவதால் பிரதான கட்சிகள் கலக்கத்தில் உள்ளன.

தமிழகத்தில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் ஆகிய நான்கு முனை போட்டி நிலவும் நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் புதிய தமிழகம், சசிகலா தரப்பில் வலுவான வேட்பாளர்கள் நிறுத்தப் பட்டுள்ளதால் 6 முனை போட்டி நிலவுகிறது.

இத்தொகுதியில் அதிமுக 7 முறை, திமுக, காங்கிரஸ் தலா 3 முறை, இந்திய கம்யூனிஸ்ட் 2 முறை வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சை வேட்பாளர் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளார். 2021 தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியை மட்டும் அதிமுக தக்கவைத்துக் கொண்டது.

2026 தேர்தலில் திமுக கூட்டணி யில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மகாலிங்கம், அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ சந்திர பிரபா, நாம் தமிழர் கட்சி சார்பில் கரிகாலப் பாண்டியன், புதிய தமிழகம் கட்சி சார்பில் ஷியாம், சசிகலா தரப்பில் (அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்) முன்னாள் எம்எல்ஏ சந்திரா, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கார்த்திக் ஆகிய 6 பேர் களம் காண்கின்றனர்.

திமுக கூட்டணியின் பலம், தொழிலாளர்கள் இடையே கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு உள்ள செல்வாக்கு ஆகியவற்றை நம்பி மகாலிங்கம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக கூட்டணியில் சிட்டிங் எம்எல்ஏ மான்ராஜுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், முன்னாள் எம்எல்ஏ சந்திரபிரபா போட்டியிடுகிறார்.

7 முறை ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக வெற்றிபெற்றுள்ளது. தொகுதியில் அதிமுகவுக்கு உள்ள செல்வாக்கு, ஏற்கெனவே எம்எல்ஏவாக இருந்தபோது செய்த பணிகளை நம்பி சந்திர பிரபா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மீது புகார் நாம் தமிழர் கட்சி, இத்தொகுதி யில் கடந்த தேர்தலில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றது. அக்கட்சி சார்பில் 2016-ல் போட்டியிட்ட கரிகாலப் பாண்டியன் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் சீமானின் கொள்கைகளை மையப்படுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் மகனும், அக்கட்சியின் இளை ஞரணி தலைவருமான ஷியாம் திருநெல்வேலி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். எனினும், கடந்த 2 ஆண்டுகளாக ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியை குறிவைத்து தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை முன்வைத்தும், திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளும் தமது சமூகத்தை ஏமாற்றி விட்டதாகவும் கூறி பிரச்சாரம் செய்து வருகிறார். நடிகர் விஜய் தலைமை யிலான தமிழக வெற்றிக் கழகத்துக்கு இளைஞர்களிடம் உள்ள ஆதரவை நம்பி, அக்கட்சியின் வேட்பாளர் கார்த்திக் தீவிரமாக களமாடி வருகிறார்.

அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் சசிகலா தரப்பு வேட்பாளரான முன்னாள் எம்எல்ஏ சந்திரா வுக்கு முக்குலத்தோர் ஆதரவு வாக்குகள் கணிசமாக கிடைக்கும் சூழல் உள்ளது.

கடுமையான போட்டி

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி யில் இம்முறை சிறிய கட்சிகளால் வாக்குகள் பிரியும் சூழ்நிலை நிலவுகிறது. இது பிரதான கட்சிகளின் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பதில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி கடுமையாக உள்ளதால் திமுக, அதிமுக கூட்டணிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.