தமிழர் அரசியல் தீர்வுக்கான 28 பேர் வழிநடத்தல் குழு நியமிப்பு

தமிழ்த்தேசிய பேரவையினால் கடந்த பெப்ரவரி மாத நடுப்பகுதியில் நடாத்தப்பட்ட கூட்டத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழர் தரப்பின் நிலைப்பாட்டினைக் கூட்டாக முன்வைப்பதற்கான தீர்வுத்திட்ட வரைவைத் தயாரிப்பதற்கும், அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்வதற்கும் என அரசியல் தலைவர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், துறைசார் நிபுணர்கள் என 28 பேர் அடங்கிய ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபையின் வழிநடத்தல் குழுவை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபையின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி தி.விக்னேஸ்வரனால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது;

தமிழ்த்தேசியப் பேரவையினால் கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி சிவில் அமைப்புக்கள், அரசியல் தரப்புக்கள், துறைசார் நிபுணர்கள், தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் மற்றும் மதத்தலைவர்கள் உள்ளிட்ட சகல தரப்பினரும் அழைக்கப்பட்டு யாழ் நல்லூரில் அமைந்துள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் அரசியலமைப்பு செயன்முறைகள் தொடர்பான விரிவான கலந்துரையாடலொன்று நடைபெற்றது. அக்கலந்துரையாடலின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எந்த வடிவிலான தீர்வையும் நிராகரிப்பது எனவும், திம்பு கோட்பாட்டினை அடிப்படையாகக்கொண்டு தீர்வுத்திட்ட வரைவைத் தயாரிப்பது எனவும் இணங்கப்பட்டது.

அச்செயன்முறையை முன்னெடுத்துச் செல்வதை இலக்காகக்கொண்டு குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட சிவில் அமைப்புக்கள், அரசியல் தரப்புக்கள், மதத்தலைவர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய ‘ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபை இயங்கும் எனத் தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழர் தரப்பின் நிலைப்பாட்டினைக் கூட்டாக முன்வைப்பதற்கான தீர்வுத்திட்ட வரைவைத் தயாரிப்பதற்குரிய வழிநடத்தல் குழுவைத் தெரிவுசெய்து அறிவிப்பது என்றும், அச்செயன்முறைகளை முன்னெடுத்துச்செல்லும் ஒருங்கிணைப்பாளராக கலாநிதி தி.விக்னேஸ்வரன் செயற்படுவார் என்றும் இணக்கம் காணப்பட்டது.

அதற்கமைய முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி தி.விக்னேஸ்வரன் (ஒருங்கிணைப்பாளர்), தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவர் பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி இ.ஜெயந்திரன், முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி ஏ.சரவணபவன், சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் பிரபாகரன், தமிழ் சிவில் சமூக அமையத்தின் சார்பில் மருத்துவர் எஸ்.குமாரவேள் மற்றும் அ.கஜேந்திரன், மூத்த அரசியல் ஆய்வாளர் ம.நிலாந்தன், அடையாளர் கொள்கை ஆய்வுக்கான நிலையத்தின் சார்பில் அ.அனுசானி, குடிசார் அமைப்புக்களின் சம்மேளனத்தின் சார்பில் சுவந்தினி சிவஞானராஜ், அருட்தந்தை சத்தியசீலன், தமிழர் மரபுரிமை பேரவை உறுப்பினர் விமலசேகரன் வசந்தன், சிரேஷ்ட சட்டத்தரணி ஜெ.ஜெயரூபன், தமிழ் சிவில் சமூக அமையத்தின் சார்பில் பொ.ந.சிங்கம், அரசறிவியல் துறை முதுநிலை விரிவுரையாளர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், ஓய்வுநிலை பேராசிரியர் ஏ.சூசை ஆனந்தன், சிரேஷ்ட சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம், சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.விஜயகுமார், முதுநிலை விரிவுரையாளர் மாரிமுத்து பிரகாசன், மன்னார் பிரஜைகள் குழு சார்பில் அருட்தந்தை மார்க்கஸ், ஜனநாயக தமிழரசுக்கட்சயின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, தமிழ்த்தேசியக் கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ந.சிறீகாந்தா, தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐந்கரநேசன், சிரேஷ்ட சட்டத்தரணி க.சுகாஸ், சிரேஷ்ட சட்டத்தரணி ந.காண்டீபன், தமிழ்த்தேசியப் பேரவை சார்பில் க.அருந்தவபாலன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன், சட்ட மற்றும் கொள்கைகளுக்கான ஆய்வு நிலையத்தின் ஆய்வாளர் சிவகுமார் சிவகஜன் ஆகியோர் உள்ளடக்கிய ‘ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபையின் வழிநடத்தல் குழு’ நியமிக்கப்பட்டிருப்பதுடன், இக்குழுவில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் உறுப்பினர்கள் உள்வாங்கப்படுவர்.

இந்த வழிநடத்தல் குழுவானது தமிழர் தேசமும் அதன் தனித்துவமான இறைமையும் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் முழுமையான சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வகையில் தமிழர் தேசத்துக்கும் சிங்கள தேசத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்படவேண்டிய சமூக ஒப்பந்த வரைவைத் தயாரிக்கும்.

அதேபோன்று தமிழர் தேசமும் அதன் தனித்துவமான இறைமையும் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் முழுமையான சுயநிர்ணய உரிமையைக் கூட்டாட்சி முறைமைக்குள் அனுபவிப்பதற்கான விரிவான தீர்வுத்திட்ட வரைவு ஒன்றையும் தயாரிக்கும் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.