சீனா மற்றும் இலங்கைக்கு இடையிலான வர்த்தக நடவடிக்கைகளின்போது ‘ரென்மின்பி’ நாணய அலகின் மூலமான கொடுக்கல், வாங்கல்களை ஊக்குவிப்பதன் ஊடாகக் கிடைக்கக்கூடிய நன்மைகள் தொடர்பில் சீன மக்கள் வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்கள் விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் 2026 ஆம் ஆண்டுக்கான வசந்தகாலக் கூட்டங்கள் கடந்த வாரம் வொஷிங்டனில் உள்ள உலக வங்கியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் பக்க நிகழ்வாக சீன மக்கள் வங்கியின் ஆளுநர் கலாநிதி பான் கோங்ஷெங்குடன் சந்திப்பொன்றை நடாத்திய இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நாட்டின் சமகால பொருளாதார நிலைவரம் மற்றும் இருதரப்பு அக்கறைக்குரிய விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடினார்.
குறிப்பாக தீவிரமடைந்துவரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் குறித்து ஆளுநர்கள் இருவரும் கலந்துரையாடிய அதேவேளை, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களினால் எழுந்திருக்கும் சவால்கள் மற்றும் அதற்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார நிலைவரம் என்பன பற்றித் தெளிவாக விளக்கமளித்தார்.
மேலும் சீனா மற்றும் இலங்கைக்கு இடையிலான வர்த்தக நடவடிக்கைகளின்போது ‘ரென்மின்பி’ நாணய அலகின் மூலமான கொடுக்கல், வாங்கல்களை ஊக்குவிப்பதன் ஊடாகக் கிடைக்கக்கூடிய நன்மைகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.



